Asianet News TamilAsianet News Tamil

பாண்டிங், லாரா, ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித் ஆகிய லெஜண்ட் வீரர்களின் சாதனையை முறியடித்த பாபர் அசாம்! புதிய வரலாறு

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அடித்த சதத்தின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங், பிரயன் லாரா, மஹேலா ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித் ஆகிய மிகப்பெரிய ஜாம்பவான் கிரிக்கெட்டர்களின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார் பாபர் அசாம்.
 

babar azam breaks former legend cricketers record in international cricket as a captain
Author
First Published Dec 26, 2022, 8:34 PM IST

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பட்டியலில் இணைந்தார் பாபர் அசாம். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அபாரமாக பேட்டிங் ஆடி பேட்டிங்கில் பழைய சாதனைகளை தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவருவதால் விராட் கோலியுடன் ஒப்பிடப்படுகிறார்.

ஆனால் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் பாபர் அசாமின் கேப்டன்சி கடும் விமர்சனத்துக்குள்ளானது. அணி தேர்வில் பாரபட்சம் காட்டுவதாக விமர்சனம் எழுந்தது. ஐசிசி தொடர்கள் தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜாவும், தேர்வுக்குழு தலைவர் பதவியிலிருந்து முகமது வாசிமும் நீக்கப்பட்டனர்.

ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக வச்சுகிட்டு இதுதான் நீங்க ஃபீல்டிங் பண்ற லெட்சணமா..? கோலியை விளாசிய கவாஸ்கர்

இடைக்கால தேர்வுக்குழு தலைவராக ஷாஹித் அஃப்ரிடி நியமிக்கப்பட்டார். ஆடும் லெவனை தேர்வு செய்வதிலும் அஃப்ரிடிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்விளைவாக, நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்ஃபராஸ் அகமது களமிறக்கப்பட்டார். 110 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டை இழந்த நிலையில், அதன்பின்னர் பாபர் அசாமும் சர்ஃபராஸ் அகமதுவும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 196 ரன்களை குவித்தனர். 

அபாரமாக பேட்டிங்  ஆடிய பாபர் அசாம் சதமடித்தார். 3 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானுக்காக டெஸ்ட் போட்டியில் ஆட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த சர்ஃபராஸ் அகமது சதத்தை நெருங்கினார். ஆனால் 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். பாபர் அசாம் முதல் நாள் ஆட்ட முடிவில் 161 ரன்களை குவித்து களத்தில் உள்ளார்.

பாபர் அசாம் இந்த சதத்தின் மூலம் முன்னாள் ஜாம்பவான்கள் ரிக்கி பாண்டிங், பிரயன் லாரா, மஹேலா ஜெயவர்தனே, கிரேம் ஸ்மித் ஆகிய ஜாம்பவான் கிரிக்கெட்டர்களின் சாதனைகளை தகர்த்துள்ளார்.

இந்த சதத்தின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக அரைசதங்கள் அடித்து ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்துள்ளார் பாபர். 2005ம் ஆண்டில் ரிக்கி பாண்டிங் 24 அரைசதங்கள் (சதங்களும் அடங்கும்) அடித்துள்ளார். இன்று பாபர் அடித்தது, 2022ம் ஆண்டில் அவரது 25வது அரைசதம் ஆகும். இதன்மூலம் ரிக்கி பாண்டிங்கின் 17 ஆண்டுகால சாதனையை தகர்த்தார் பாபர் அசாம்.

AUS vs SA: ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 26 தொடங்கும் டெஸ்ட் பாக்ஸிங் டே டெஸ்ட் என்றழைக்கப்படுவது ஏன் தெரியுமா..?

மேலும் இந்த ஆண்டில் பாபரின் 8வது சதம் இதுவாகும். இதன்மூலம், ஒரு ஆண்டில் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையையும் பாபர் அசாம் படைத்தார். பிரயன் லாரா, மஹேலா ஜெயவர்தனே, ஸ்டீவ் ஸ்மித், கிரேம் ஸ்மித் ஆகிய முன்னாள் ஜாம்பவான்களின் சாதனையை தகர்த்து, ஒரு ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையையும் பாபர் அசாம் படைத்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios