இந்தியா, இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ்க்கும், ஜெய்ஸ்வாலுக்கும் இடையே கடும் வார்த்தை போர் மூண்டது. 

IND vs ENG Test: Jaiswal and Ben Stokes Clash: இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு பதிலாக ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் இடம்பிடித்தனர்.

கே.எல்.ராகுல் ஏமாற்றம்

முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி இப்போது வரை 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது. மிக நிதானமாக விளையாடிய தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 26 பந்துகளை சந்தித்து 2 ரன் மட்டுமே எடுத்து வோக்ஸ் பந்தில் போல்டானார். இதனைத் தொடர்ந்து கருண் நாயரும், ஜெய்ஸ்வாலும் அதிரடியாக விளையாடினார்கள். சில அற்புதமான ஷாட்களை அடித்த கருண் நாயர் 50 பந்தில் 31 ரன் எடுத்து கார்ஸின் பவுன்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். மறுபக்கம் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரிஷப் பண்ட் தேவையில்லாத அவுட்

நன்றாக விளையாடி அரை சதம் கடந்து விளையாடிய ஜெய்ஸ்வால் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 87 ரன்களில் ஆட்டமிழந்தார். 107 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் அடித்த அவர் பென் ஸ்டோக்ஸ் பந்தில் கேட்ச் ஆனார். இதன்பிறகு களமிறங்கிய ரிஷப் பண்ட் (42 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 25 ரன்) தேவையில்லாமல் சோயிப் பஷிர் பந்தில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார்.

சுப்மன் கில் அரை சதம்

பின்பு வந்த நிதிஷ் குமார் ரெட்டியும் 1 ரன்னில் வோக்ஸ் பந்தில் கிளின் போல்டானார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் மிக நிதானமாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் அரைசதம் அடித்தார். இப்போது வரை இந்திய அணி 223/5 என்ற நிலையில் உள்ளது. சுப்மன் கில் 66 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்னிலும் களத்தில் இருந்தனர். முன்னதாக இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வாலுக்கும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜெய்ஸ்வால், ஸ்டோக்ஸ் இடையே வாக்குவாதம்

அதாவது தனது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்த ஜெய்ஸ்வாலை பென் ஸ்டோக்ஸ் வம்பிழுத்தார். அவரை நோக்கி ஏதோ சொல்ல, ஜெய்ஸ்வாலும் அதற்கு பதிலடி கொடுத்தார். "You don't want to hear it from me, come on" (என்னிடம் இருந்து அதை நீங்கள் கேட்க விரும்பமாட்டீர்கள், வாருங்கள்) என்று ஜெய்ஸ்வால் கூறினார். இதற்கு அடுத்த பந்திலும் இருவருக்கிடையே சிறிது வார்த்தை மோதல் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்டோக்ஸ் பந்திலேயே ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்டோக்ஸ் அதை மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.