- Home
- Sports
- Sports Cricket
- குல்தீப் யாதவ்வை சேர்க்காததற்கு 'இது' ஒரு காரணமா? சுப்மன் கில்லை விளாசும் ரசிகர்கள்!
குல்தீப் யாதவ்வை சேர்க்காததற்கு 'இது' ஒரு காரணமா? சுப்மன் கில்லை விளாசும் ரசிகர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் குல்தீப் யாதவ்வை இந்திய அணியில் சேர்க்காததற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Kuldeep Yadav Not Playing 2nd Test Against England
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில், ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் முதல் டெஸ்ட்டில் சரியாக விளையாடாத ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு நிதிஷ் குமார் ரெட்டி உள்ளே வந்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து 2வது டெஸ்ட்
இது தவிர முதல் டெஸ்ட்டில் அறிமுகமான சாய் சுதர்சனும் 2வது டெஸ்ட்டில் நீக்கப்பட்டது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கடும் விமர்சனங்களை பெற்றுக் கொடுத்துள்ளது. 2வது டெஸ்ட் போட்டி நடக்கும் எட்ஜ்பாஸ்டன் மைதானம் கடைசி இரு நாட்கள் ஸ்பின்னர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என கூறப்பட்ட நிலையில், இடது கை ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை
ஆனால் குல்தீப் யாதவ் இடம்பெறாமல் அவருக்கு பதிலாக வலது கை ஸ்பின் பவுலர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தர் நல்ல ஸ்பின் என்றாலும் அவரை விட குல்தீப் யாதவ் விக்கெட் டேக்கிங் பவுலர் ஆவார். இதனால் அவரை அணியில் சேர்க்காததற்கு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குல்தீப் யாதவ்வை அணியில் எடுக்காததற்கு டாஸ் போடும்போது விளக்கம் அளித்த கேப்டன் சுப்மன் கில், 'குல்தீப் யாதவ்வை அணியில் சேர்க்க ஆசைப்பட்டோம். ஆனால் அணியில் பேட்டிங் ஆழத்தை வலுப்படுத்துவதற்காக அவரை சேர்க்க முடியவில்லை. ஆகையால் பேட்டிங் ஆடும் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்'' என்றார்.
முகமது கைப் கடும் கண்டனம்
சுப்மன் கில்லின் இந்த காரணத்துக்கு இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ''இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடும் XI-ல் இடம் பெறவில்லை என்றால் அது நியாயமற்றது. அவர் 8 ஆண்டுகளில் 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். முன்னதாக அவர் அஸ்வின் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை, இப்போது அவர் அணியில் சேர்க்கப்படாததை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?'' என்று முகமது கைப் கூறியுள்ளார்.
ரசிகர்களும் கண்டனம்
மேலும் குல்தீப் யாதவ்வை அணியில் எடுக்காததற்கு ரசிகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ''குல்தீப் யாதவ் சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் டேக்கிங் பவுலராக விளங்கி வருகிறார். அது மட்டுமின்றி அவர் மிக மோசமாக பேட்டிங் செய்யும் வீரரும் இல்லை. அப்படி இருக்கும்போது அவரை அணியில் எடுக்காதது தவறு'' என்று கூறியுள்ளனர்.
முதல் டெஸ்ட்டில் பின்வரிசை வீரர்கள் சொதப்பல்
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கடைநிலை வீரர்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அது இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணமாகி விட்டது. இதனால் தான் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் வகையில் பிசிசிஐ வாஷிங்டன் சுந்தரை அணியில் எடுத்துள்ளது.