பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தான் கையெழுத்திட்ட ஜெர்சியை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு பரிசாக அளித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 12ஆவது லீக் போட்டி நேற்று அகமதாபாத்தில் நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்த 36 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியாக, 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்துள்ளது. ஷர்துல் தாக்கூர் 2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசியுள்ளார். மேலும், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதன் பிறகு எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். பின்னர், ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயருடன், கேஎல் ராகுல் களமிறங்கினார். இதில், ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் உலகக் கோப்பையில் அரைசதம் அடித்தார். இறுதியாக ஷ்ரேயாஸ் 53 ரன்கள் (நாட் அவுட்), கேஎல் ராகுல் 19 ரன்கள் (நாட் அவுட்) எடுக்க, இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டிக்கு பிறகு விராட் கோலி மற்றும் பாபர் அசாம் இருவரும் பேசிக் கொண்டனர். அதில், பாபர் அசாம், விராட் கோலியின் ஜெர்சியை கேட்கவே, அவர் தான் கையெழுத்திட்ட ஜெர்சியை பாபர் அசாமிற்கு பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோலி, ரோகித் சர்மா வரிசையில் இடம் பிடித்த பும்ரா: பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பையில் ஆட்டநாயகன்!
