இந்தியாவிற்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது.
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டெஸ்ட்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது. 3வது டெஸ்ட் இந்தூரிலும், 4வது டெஸ்ட் அகமதாபாத்த்திலும் நடக்கின்றன.
அதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இந்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடப்பதால் அனைத்து அணிகளுமே அதற்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு நடப்பதால் அனைத்து அணிகளும் இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிகம் ஆடுகின்றன.
இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை நடப்பதால், அதற்கு முன்பாக இந்த ஒருநாள் தொடர் இந்திய கண்டிஷனில் ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல பயிற்சியாக அமையும். இந்தியா - ஆஸ்திரேலியா இடையே மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய நகரங்களில் 3 ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன.
இந்த தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், 2வது டெஸ்ட் போட்டியில் காயமடைந்ததால் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகி ஆஸ்திரேலியாவிற்கு சென்ற நிலையில், ஒருநாள் அணியில் அவர் இடம்பிடித்துள்ளார்.
ஸ்மித், லபுஷேன், ஹெட், ஸ்டார்க், ஸாம்பா, அஷ்டான் அகர், சீன் அபாட் ஆகிய வழக்கமான வீரர்கள் அணியில் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் மார்கஸ் ஸ்டோய்னிஸ், கேமரூன் க்ரீன ஆகியோரும், விக்கெட் கீப்பர்கள் அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஸ் ஆகியோரும் அணியில் உள்ளனர்.
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பேஷ் டி20 லீக் தொடர் முழுவதும் ஆடாத ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர்கள் க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர். கணுக்காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மிட்செல் மார்ஷ் முழு ஃபிட்னெஸை அடைந்திருப்பதால் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஒருநாள் அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஸ்டார்க், ஜெய் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, கேமரூன் க்ரீன், அஷ்டான் அகர், சீன் அபாட்.
