மகளிர் டி20 உலக கோப்பையின் இறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே மெல்பர்னில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, தொடக்க வீராங்கனைகள் ஹீலி மற்றும் மூனியின் அதிரடியான அரைசதத்தால், 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனையும் ஆஸ்திரேலிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான மிட்செல் ஸ்டார்க்கின் மனைவியுமான ஹீலி, இந்திய அணியின் பவுலிங்கை தொடக்கம் முதலே அடித்து நொறுக்கினார். 

ஹீலி - மூனி தொடக்க ஜோடி இந்திய அணியின் பவுலிங்கை அசால்ட்டாக அடித்து ஸ்கோர் செய்தது. அதிலும் ஹீலியின் பேட்டிங் அபாரம். கொஞ்சம் கூட இடைவெளியே விடாமல், ஸ்கோர் உயரும் வேகத்தில் தொய்வே ஏற்படாத அளவிற்கு அடித்து ஆடினார் ஹீலி. 

பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஹீலி, 30 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த ஹீலி, ஷிகா பாண்டே வீசிய 11வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 4 சிக்ஸர்களை விளாசினார். 39 பந்தில் 75 ரன்களை குவித்த ஹீலி, 12வது ஓவரில் ராதா யாதவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். 

ஹீலி அவுட்டானதையடுத்து, மூனியுடன் கேப்டன் லானிங் ஜோடி சேர்ந்தார். மூனியும் அரைசதம் விளாசினார். டி20 கிரிக்கெட்டில் தனது 9வது அரைசதத்தை அடித்த மூனி, அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்தார். கேப்டன் லானிங்கை 16 ரன்களில் வீழ்த்திய தீப்தி ஷர்மா, அதே ஓவரில் கார்ட்னெரையும் வீழ்த்தினார். ஆனால் மூனி கடைசி வரை களத்தில் நின்று 54 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 78 ரன்களை குவித்தார். 

ஹீலி மற்றும் மூனியின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி. 185 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி, மூன்றாவது பந்திலேயே முக்கியமான ஷஃபாலி வெர்மாவின் விக்கெட்டை இழந்தது. இந்த உலக கோப்பை முழுவதும் சிறப்பாக ஆடி அதிரடியான தொடக்கத்தை இந்திய அணிக்கு அமைத்து கொடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஷஃபாலி வெர்மா, மூன்றாவது பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்னில் வெளியேறினார். 

அப்போதே இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த வாய்ப்பும் முடிந்துவிட்டது. ஏனெனில் அவரைத்தவிர இந்த உலக கோப்பையில் வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ஸ்மிரிதி மந்தனா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ஆகியோர் சோபிக்கவில்லை. லீக் சுற்றில் இந்திய அணி வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் ஷஃபாலி வெர்மாvவின் இன்னிங்ஸ் தான் இந்திய அணிக்கும் எதிரணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அமைந்தது. 

எனவே அவரே மூன்றாவது பந்தில் அவுட்டானதால், இந்திய அணியின் கொஞ்ச நம்பிக்கையும் சிதைந்தது. தானியா பாட்டியா இரண்டாவது ஓவரிலேயே ஜானசனின் பந்தில் பின்கழுத்தில் அடிபட்டதால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். அதன்பின்னர் ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் என யாருமே சரியாக ஆடவில்லை. இந்திய வீராங்கனைகள் மளமளவென விக்கெட்டுகளை இழந்து வெறும் 99 ரன்களுக்கே ஆல் அவுட்டாகினர். இந்திய அணியில் அதிகபட்சமாக தீப்தி ஷர்மா 33 ரன்கள் அடித்தார். 

Also Read - இந்திய அணியின் ஃபீல்டிங் கோச்சாக விரும்பிய ஜாண்டி ரோட்ஸ்.. புறக்கணிக்கப்பட்டது ஏன்? ஜாண்டி ரோட்ஸ் தடாலடி

இந்திய அணி 99 ரன்களுக்கே ஆல் அவுட்டானதையடுத்து 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி, 5வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.