கடந்த ஆண்டில் இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது. அப்போது இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்திருந்தார். 

கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த ஃபீல்டரும், ஃபீல்டிங்கின் அடையாளமாக திகழ்பவருமான ஜாண்டி ரோட்ஸ், இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஏற்கனவே இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்த ஸ்ரீதரே மீண்டும் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

ஃபீல்டிங்கின் அடையாளமான ஜாண்டி ரோட்ஸையே இந்திய கிரிக்கெட் புறக்கணித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் ஸ்ரீதரின் பயிற்சிக்காலத்தில் இந்திய அணியின் ஃபீல்டிங் வெகுவாக மேம்பட்டது. இந்திய அணி தரமான ஃபீல்டிங் அணியாக உருவாக்கியதில் ஸ்ரீதரின் பங்கு அளப்பரியது. எனவே தான் அவர் மீண்டும் ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

ஜாண்டி ரோட்ஸ் தேர்வு செய்யப்படாததே பேரதிர்ச்சி. அதிலும் டாப் 3 இடத்தில் கூட அவர் இடம்பெறாதது அதைவிட பெரிய அதிர்ச்சி. ஃபீல்டிங் பயிற்சியாளராக தேர்வாகவில்லை என்றாலும், தேர்வானவருக்கு அடுத்த 2 இடங்களில் இடம்பெற்றிருந்தால், இந்தியா ஏ அல்லது தேசிய கிரிக்கெட் அகாடமியின் பயிற்சியாளராகும் வாய்ப்பை பெறலாம். ஆனால் டாப் 3ல் ஜாண்டி ரோட்ஸின் பெயரே இடம்பெறாமல் போனது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 

அதுகுறித்து அப்போதே விளக்கமளித்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், இந்திய அணியை தரமான ஃபீல்டிங் அணியாக உயர்த்தியிருக்கிறார் ஸ்ரீதர். அதனால் வேறு யாரையும் அந்த இடத்திற்கு யோசிப்பதற்கே வேலையில்லாமல் போய்விட்டது என்றார். மேலும் ஸ்ரீதரே முதன்மை தேர்வு என்பதால் அவரை தேர்வு செய்துவிட்டோம். அதேநேரத்தில் டாப் 3ல் ஒருவராக ஜாண்டி ரோட்ஸை தேர்வு செய்தால் இந்தியா ஏ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாண்டி ரோட்ஸ் வருவார். ஆனால் அவரது தகுதிக்கு இவையெல்லாம் சிறிய பதவிகள் என்பதால் அவருக்கு அது சரியாக வராது என்பதால் டாப் 3ல் அவரை தேர்வு செய்யவில்லை என்று எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார். 

Also Read - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் 2 வீரர்கள் சர்ப்ரைஸ் தேர்வு..?

இந்நிலையில், அண்மைக்காலமாக இந்திய அணியின் ஃபீல்டிங் படுமோசமாக இருப்பதால், அதிருப்தியடைந்த ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படவில்லை என ஜாண்டி ரோட்ஸிடம் டுவிட்டரில் கேள்வியெழுப்பியிருந்தார். 

அதற்கு பதிலளித்த ஜாண்டி ரோட்ஸ், அவர்கள்(இந்திய கிரிக்கெட் நிர்வாகம்), "No Thanks" என்று சொல்லிவிட்டார்கள் என்று பதிலளித்துள்ளார்.