Sri Lanka: இந்தியாவுக்கு எதிராக 302 வித்தியாசத்தில் தோல்வி – இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக கலைப்பு!
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியானது 302 வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியமானது அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடந்து வரும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. ஏற்கனவே இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. 3ஆவது மற்றும் 4ஆவது இடத்திற்கான ரேஸில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரில் இலங்கை அணி விளையாடிய 7 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி அரையிறுதி வாய்ப்பையும் இழந்து விட்டது. கடந்த 2ஆம் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 33ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், இந்தியா 357 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 302 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்வியின் எதிரொலி காரணமாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணதுங்கா இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அதிரடியாக கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
India vs South Africa: விராட் கோலியின் சதம், இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய திருமண ஜோடி!
மேலும், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக அர்ஜூன் ரணதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த கிரிக்கெட் வாரியத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி உள்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில், ஓய்வு பெற்ற நீதிபதிபதிகள் எஸ்.ஐ.இமாம், ரோகிணி மரசிங்கே, இரங்கானி பெரேரா, முன்னாள் அமைச்சர் அர்ஜூன் ரணதுங்கா (தலைவர்), உபாலி தர்மதாசா, ரகீதா ராஜபக்ஷே, ஹிஷான் ஜமால்தீன் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இன்று நடக்கும் 38ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி டெல்லியில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து, வரும் 9 ஆம் தேதி பெங்களூருவில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 41 ஆவது லீக் போட்டி நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.