இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் ஸ்வீப் அடிக்க முயற்சித்து பாகிஸ்தான் வீரர் அகா சல்மான் முகத்தில் அடி வாங்கிய நிலையில், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டி தற்போது நடந்து வருகிறது. நேற்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியின் போதும் மழை பெய்தது. இதன் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது. பின்னர், ஆடிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சதம் அடித்தனர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி 122 ரன்னுடனும், கேஎல் ராகுல் 111 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். இமாம் உல் ஹாக் 9 ரன்னில் பும்ரா பந்தில் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா பந்தில் கிளீன் போல்டானார். பின்னர் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் களமிறங்கினார். அவரும் வந்த வேகத்தில் ஷர்துல் தாக்கூர் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.
India vs Pakistan: வேலையை காட்டிய மழை; என்ன சோனமுத்தா போச்சா…. இப்போ மழையா? யாருக்கு சாதகம்?
இதையடுத்து அகா சல்மான் களமிறங்கினார். ஆனால், அதற்குள்ளாக மற்றொரு தொடக்க வீரர் ஃபஹர் ஜமான் 27 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் கிளீன் போல்டானார். இவரைத் தொடர்ந்து இப்திகார் அகமது களமிறங்கினார். போட்டியின் 21ஆவது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தை அகா சல்மான் எதிர்கொண்டார். அப்போது அவர் ஹெல்மெட் அணியவில்லை. அந்த பந்தை ஸ்வீங் அடிக்க முயற்சித்த நிலையில், முகத்தில் அடி வாங்கினார். இதனால், அவரது முகத்தின் வலது கண் பகுதிக்கு கீழ் பலத்த காயமடைந்த நிலையில், ரத்தம் கொட்டியது. இதையடுத்து மருத்துவர் வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. எனினும், பெரியளவில் பாதிப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதையடுத்து மீண்டும் ஹெல்மெட் அணிந்து விளையாடினார். அவர், தற்போது வரையில் 30 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 22 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். பாகிஸ்தான் 23.2 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 94 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
