விராட் கோலி பண்ணது கண்டிப்பா ஃபேக் ஃபீல்டிங்.. அது தப்பு தான்..! முன்னாள் இந்திய வீரர் அதிரடி
வங்கதேசத்துக்கு எதிராக விராட் கோலி செய்தது கண்டிப்பாக ஃபேக் ஃபீல்டிங் தான் என்றும், அது பேட்ஸ்மேனை ஏமாற்றும் முயற்சிதான் என்பதால் அது கண்டிப்பாக தவறுதான் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் கள நடுவர்கள் கவனிக்காததால் தப்பித்தோம் என்றார் ஆகாஷ் சோப்ரா.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள இந்தியா - வங்கதேசம் இடையே அடிலெய்டில் நடந்த போட்டியில் இந்திய அணி ஜெயித்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, விராட் கோலி(44 பந்தில் 64 ரன்கள்) மற்றும் கேஎல் ராகுலின் (32 பந்தில் 50 ரன்கள்) அதிரடி அரைசதங்கள் மற்றும் சூர்யகுமார் யாதவின் (16 பந்தில் 30 ரன்கள்) கேமியோவால் 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது இந்திய அணி.
185 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடி 21 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது அதிரடி அரைசதத்தால் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை வங்கதேச அணி குவித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை காரணமாக 15 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. டி.எல்.எஸ் முறைப்படி 16 ஓவரில் 151 ரன்கள் வங்கதேசத்துக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மழை முடிந்து களத்திற்கு வந்த லிட்டன் தாஸை ராகுல் ரன் அவுட்டாக்கி அனுப்பினார். 27 பந்தில் 60 ரன்களை குவித்து இந்திய அணியை மிரட்டிவந்த லிட்டன் தாஸை டேரக்ட் த்ரோவின் மூலம் ராகுல் ரன் அவுட்டாக்க, அதன்பின்னர் வங்கதேச பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிய, 16 ஓவரில் 145 ரன்கள் அடித்து 5 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்றது.
டி20 உலக கோப்பை: இலங்கையின் கையில் ஆஸ்திரேலியாவின் குடுமி..! புள்ளி பட்டியல் அப்டேட்
வங்கதேச இன்னிங்ஸின்போது விராட் கோலி ஃபேக் ஃபீல்டிங் செய்தது சர்ச்சையை கிளப்பியது. வங்கதேசம் பேட்டிங்கின்போது 7வது ஓவரின் 3வது பந்தை லிட்டன் தாஸ் அடித்துவிட்டு 2 ரன் ஓட, அந்த பந்தை பிடித்து அர்ஷ்தீப் சிங் த்ரோ அடித்தார். அர்ஷ்தீப் அடித்த த்ரோவில் பந்து விக்கெட் கீப்பரை நோக்கி செல்ல, பந்துக்கு சம்மந்தமே இல்லாமல் நின்ற விராட் கோலி, அந்த பந்தை பிடித்து த்ரோ அடிப்பது போல் சும்மா ஆக்ஷன் செய்தார். அதை ஆட்டத்தின்போது அம்பயர் கவனிக்கவில்லை. வங்கதேச வீரர்களும் அப்பீல் செய்யவில்லை. அதனால் ஆட்டத்தின்போது அது சர்ச்சையாகவில்லை.
போட்டிக்கு பின் தான் அது விவாதமாகவும் சர்ச்சையாகவும் உருவெடுத்தது. போட்டிக்கு பின் இதுகுறித்து பேசிய வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன், அந்த ஃபேக் ஃபீல்டிங்கிற்கு 5 ரன் வழங்கியிருந்தால் ஆட்டம் எங்களுக்கு சாதமாகியிருக்கும். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை என்றார். வங்கதேச ரசிகர்களும் விராட் கோலியை விமர்சித்தனர்.
ஐசிசி விதிப்படி 41.5ன் படி பேட்ஸ்மேன்களின் கவனத்தை சிதறடிக்கும்படி உள்நோக்கத்துடன் ஏமாற்றக்கூடாது. அப்படி செய்யும்பட்சத்தில் 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும். ஆனால் விராட் கோலி விஷயத்தில் களநடுவர்கள் கவனிக்காததாலும், வங்கதேச வீரர்கள் அப்போதே அப்பீல் செய்யாததாலும், அதற்கு பெனால்டி ரன்கள் வழங்கப்படவில்லை.
இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்து விவாதப்பொருளான நிலையில், இதுகுறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஆம்.. விராட் கோலி செய்தது கண்டிப்பாக 100% ஃபேக் ஃபீல்டிங் தான். பந்தை பிடிக்காமலே பேட்ஸ்மேனை ஏமாற்றும் விதமாகத்தான் த்ரோ அடிப்பது போல் ஆக்ஷன் செய்தார். அம்பயர் அதை பார்த்திருந்தால் 5 ரன் பெனால்டி கொடுத்திருப்பார். இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் தான் ஜெயித்தது. எனவே நாம் தப்பித்தோம். அடுத்த முறை வேறு யாராவது ஒரு வீரர் இப்படி செய்தால் அம்பயர்கள் கவனமாக இருக்க வேண்டும். எனவே வங்கதேசம் கூறுவது சரிதான் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.