Asianet News TamilAsianet News Tamil

IPL 2023 Mini Auction: விலை போக வாய்ப்பே இல்லாத 5 வெளிநாட்டு வீரர்கள்

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் வரும் 23ம் தேதி நடக்கும் நிலையில், அந்த ஏலத்தில் விலைபோக வாய்ப்பில்லாத 5 வெளிநாட்டு வீரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
 

5 overseas cricketers who might be unsold in ipl 2023 mini auction held on december 23 at kochi
Author
First Published Dec 17, 2022, 9:05 PM IST

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், 16வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்ததால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது. வரும் 23ம் தேதி கொச்சியில் ஐபிஎல் மினி ஏலம் நடக்கவுள்ளது. 

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்தில் 714 இந்திய வீரர்கள் மற்றும் 277 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 991 வீரர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 405 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு, அந்த 405 வீரர்களும் ஏலம் விடப்படவுள்ளனர். இதில் ஏலத்தில் விலைபோக வாய்ப்பில்லாத 5 வெளிநாட்டு வீரர்களை பார்ப்போம்.

1. ஆஞ்சலோ மேத்யூஸ் (இலங்கை)

இலங்கை அணியின் அனுபவ ஆல்ரவுண்டர் ஆஞ்சலோ மேத்யூஸ். 2009ம் ஆண்டிலிருந்து 2017 வரை ஐபிஎல்லில் ஆடினார். அந்த காலக்கட்டத்தில் கேகேஆர், புனே வாரியர்ஸ் இந்தியா, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகளில் ஆடியிருக்கிறார். பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலுமே சிறந்த பங்களிப்பு செய்யக்கூடிய வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ். அவர் எந்த அணியில் இருப்பதும் அந்த அணிக்கு கண்டிப்பாகவே பலம் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல்லில் ஆடாத மேத்யூஸ், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆடியும் சுமார் 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் சிறந்த ஆல்ரவுண்டராக இருந்தாலும், ரூ.2 கோடியை அடிப்படை விலையாக கொண்ட அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க வாய்ப்பில்லை.

IPL 2023 Mini Auction: 10 ஐபிஎல் அணிகளும் தக்கவைத்த வீரர்கள்.. கையிருப்பு தொகை விவரம்

2. ஷேய் ஹோப் (வெஸ்ட் இண்டீஸ்)

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷேய் ஹோப். ஐபிஎல்லில் முதல் முறையாக ஆட கிடைக்கும் வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பேயில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர் ஷேய் ஹோப். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடியிருக்கிறார். ஆனால் இவர் அடித்து ஆடக்கூடிய வீரர் கிடையாது. நிதானமாக ஆடும் வீரர். ஒருநாள் போட்டிகளில் பந்தை விட இவர் அடித்த ரன் குறைவாகவே இருக்கும். 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்காக 19 போட்டிகளில் ஆடி 17.88 என்ற சராசரியுடன் 304 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். டி20 கிரிக்கெட் முழுக்க முழுக்க அதிரடி பேட்ஸ்மேன்களுக்கானது. அதிலும் எண்டர்டெய்ன்மெண்ட்டின் உச்சமாக திகழும் ஐபிஎல்லில் இவர் மாதிரியான பேட்ஸ்மேன்கள் எடுபடுவதில்லை. எனவே இவர் மீதும் ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டாது. விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ஷேய் ஹோப்பிற்கு ஃபிலிப் சால்ட், நிகோலஸ் பூரன், ஹென்ரிச் கிளாசன், லிட்டன் தாஸ், குசால் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் போட்டியாக இருப்பார்கள்.

3. டாம் லேதம் (நியூசிலாந்து)

நியூசிலாந்து அணிக்காக 10 ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடிவரும் டாம் லேதம் இதுவரை ஒரு ஐபிஎல் போட்டியில் கூட ஆடியதில்லை. 2018ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்தார். ஆனால் ஒரு அணி கூட அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. அதன்பின்னர் ஐபிஎல் ஏலத்தில் பெயர் கொடுக்காத டாம் லேதம், இந்த ஏலத்தில் ஏதாவது ஒரு அணி தன்னை எடுக்குமா என்ற ஆர்வத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். ஆனால் இவரை ஏலத்தில் எந்த அணியும் எடுக்க வாய்ப்பில்லை. விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான இவருக்கும் ஷேய் ஹோப்பிற்கு போட்டியாக திகழும் குசால் மெண்டிஸ், கிளாசன், பூரன், லிட்டன் தாஸ் ஆகியோர் தான் போட்டியாக இருப்பார்கள்.

4. கிரைக் ஓவர்டன் (இங்கிலாந்து)

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிரைக் ஓவர்டன் சர்வதேச கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் ஆடியுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கிறாரே தவிர, அவர் டி20 கிரிக்கெட்டில் ஆடியதில்லை. ஆனாலும் ரூ.2 கோடி அடிப்படை விலை பிரிவில் தனது பெயரை கொடுத்துள்ளார். இவரை எடுப்பதற்கு பதிலாக ஜேசன் ஹோல்டர், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் மாதிரியான டி20 கிரிக்கெட்டிலும் ஐபிஎல்லிலும் அனுபவம் கொண்ட வீரர்கள் மீது தான் ஐபிஎல் அணிகள் கவனம் செலுத்தும். டி20 கிரிக்கெட்டில் இதுவரை  ஆடிராத மற்றும் கவனம் ஈர்க்காத இவர் மீது அணிகள் ஆர்வம் செலுத்தாது.

ரிஷப் பண்ட்டின் உடல் எடை தான் அவரது பலவீனம்.. உடல் எடையை குறைத்தே ஆகணும்..! சல்மான் பட் ஓபன் டாக்

5. டார்ஷி ஷார்ட் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலிய வீரர் டார்ஷி ஷார்ட், ரூ.75 லட்சம் அடிப்படை விலைப்பிரிவில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். கடைசியாக 2018 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய டார்ஷி ஷார்ட் அந்த சீசனில் 7 போட்டிகளில் ஆடி 115 ரன்கள் மட்டுமே அடித்தார். ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார். அவர் அந்த சீசனில் பெரிதாக ஜொலிக்கவில்லை. அதன்பின்னர் அவர் ஐபிஎல்லில் ஆடவில்லை. டார்ஷி ஷார்ட்டை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவும் இல்லை. 

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக ஆடவில்லை. 2018-2020 காலக்கட்டத்தில் 23 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 642 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரது பேட்டிங் சராசரி 30.57 ஆகும். அவர் ஜொலிக்காததால் ஆஸ்திரேலிய அணியிலும் தனது இடத்தை இழந்தார். ஷகிப் அல் ஹசன், சிக்கந்தர் ராசா ஆகிய வீரர்கள் மீது ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டும் என்பதால் டார்ஷி ஷார்ட்டை எடுக்க எந்த அணியும் முன்வர வாய்ப்பில்லை.
 

Follow Us:
Download App:
  • android
  • ios