ரிஷப் பண்ட்டின் உடல் எடை தான் அவரது பலவீனம்.. உடல் எடையை குறைத்தே ஆகணும்..! சல்மான் பட் ஓபன் டாக்
ரிஷப் பண்ட் அவரது உடல் எடையை குறைத்தே தீரவேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து கூறியுள்ளார்.
இந்திய அணியில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் தோனிக்கு அடுத்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். அவரது சர்வதேச கெரியரின் தொடக்கத்தில் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய ரிஷப் பண்ட், அதன்பின்னர் விக்கெட் கீப்பிங் திறமையை வளர்த்துக்கொண்டு இந்திய அணியில் தனக்கான இடத்தை பிடித்தார்.
ஆனால் அண்மைக்காலமாக அவரது பேட்டிங் மோசமாக உள்ளது. வெள்ளைப்பந்து அணிகளிலிருந்து ஓரங்கட்டப்படவும் செய்தார். அவர் நல்ல வீரர் என்றாலும், அவரது மோசமான ஷாட் செலக்ஷன் தான் அவரது பெரிய பிரச்னையாக உள்ளது. அதுதான் அவரது பலவீனமும் கூட.
மேலும் ரிஷப் பண்ட்டின் ஃபிட்னெஸும் பிரச்னையாக உள்ளது. அவரது உடல் எடை குறித்து தொடர்ச்சியாக பேசப்பட்டுவருகிறது. உடல் எடையை குறைக்கவேண்டும் என்று ஏற்கனவே அவருக்கு அறிவுறுத்தல்கள் வலுத்தன. அதற்காக ஒரு இடைவெளி வழங்கப்பட்டு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனாலும் பலனில்லை.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரிஷப் பண்ட் 46 ரன்கள் அடித்தார். இந்த இன்னிங்ஸிலும் ஒரு வித்தியாசமான ஷாட் செலக்ஷனுக்கு முயன்று ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் உடல் எடை சரியாக இருந்து ஃபிட்னெஸுடன் இருந்தால், அவர் முயற்சிக்கும் வித்தியாசமான ஷாட்டுகளை சரியாக கனெக்ட் செய்யமுடியும் என்று சல்மான் பட் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சல்மான் பட், ரிஷப் பண்ட் அவர் விரும்புகிற மாதிரி பேட்டிங் ஆடுகிறார். வித்தியாசமான ஷாட்டுகளை ஆட முயற்சிக்கிறார். பந்து பேட், கால்காப்பில் பட்டு ஸ்டம்ப்பில் பட்டது. இதுவே வித்தியாசமான அவுட் தான். ரிஷப் அதிக உடல் எடையுடன் இருக்கிறார். அவர் உடல் எடையை குறைத்து முழு ஃபிட்னெஸுடன் இருந்தால் அவர் ஆட நினைக்கும் வித்தியாசமான ஷாட்டுகளை அவரால் நேர்த்தியாக ஆடமுடியும் என்று சல்மான் பட் கூறியுள்ளார்.