அதிமுக பொதுக்குழு செல்லுமா, செல்லாதா? உச்ச நீதிமன்ற கருத்தால் குஷியில் ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் இபிஎஸ்.!
அதிமுக பொதுக்குழு தொடர்பாக கடந்த 6-ம் தேதி தாங்கள் வழங்கிய தீர்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல், உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக கடந்த 6-ம் தேதி தாங்கள் வழங்கிய தீர்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல், உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் பெரும் பூதாகரமாக வெடித்தது. இதனையடுத்து, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி வழக்கின் தீர்ப்பை பொதுக்குழு நடைபெறும் நாளான 11ம் தேதி காலை 9 மணிக்கு வழங்கப்படும் என்றார். பின்னர், நீதிபதி வழங்கிய தீர்ப்பில் உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. மேலும், உச்சநீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துள்ளதால் அதனை மீற முடியாது. ஆகையால், பொதுக்குழுவை நடத்தலாம். விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க;- அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் - இபிஎஸ் அழைப்பு.. செம ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்!
இந்த உத்தரவை தொடர்ந்து, பொதுக்குழு நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு கடந்த ஜூலை 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை. அதனால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இதையும் படிங்க;- உண்மையான அதிமுக எடப்பாடி தான்.. மகிழ்ச்சியில் இருந்த இபிஎஸ் தரப்புக்கு 'ஓபிஎஸ்' கொடுத்த ட்விஸ்ட் !
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் ஜூலை 29ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மீண்டும் இரு தரப்பும் இணை வாய்ப்பு உள்ளதா? என வினவினார். இதனையடுத்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து மனுக்களையும் மீண்டும் 2 வாரங்களுக்குள் விசாரித்து, உயர்நீதிமன்றம் உத்தரவுகளை வழங்க வேண்டும். அதுவரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற அமர்வின் இந்த தீர்ப்பு நகல் முழுமையாக வெளியாகியிருக்கிறது. அதில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜூலை 11ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். பொதுக்குழு நடைபெற வேண்டுமா, கூடாதா என கடந்த 6-ம் தேதி உச்சநீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதாவது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தவறாகச் சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், உட்கட்சி முடிவில் தலையிட முடியாது என்றும் இதில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றே கூறியுள்ளோம். ஆனால் எங்கள் தீர்ப்பை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தவறாக புரிந்து கொண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக சுதந்திரமாக, சட்டவிதிகளுக்கு உட்பட்டு உயர்நீதிமன்றம் விசாரணையை நடத்தி, உத்தரவுகளை வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
தங்கள் உத்தரவை தவறாகப் புரிந்துகொண்டு ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருப்பது ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. பொதுக்குழுவை நடத்தலாம் என ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பு தவறான புரிதலால் வழங்கப்பட்டது என்றால், அதன் மூலம் நடத்தப்பட்ட பொதுக்குழுவும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் என எதுவுமே செல்லாததாகி விடும் என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை எடுத்து வைக்க தயாராகி வருகிறது. இதற்காக மூத்த சட்ட நிபுணர்களிடம் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய வழக்குக்கான மனுக்கள் தயாரிக்கப்பட்டு, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் புதிய வழக்குக்கான மனுவை வழங்க திட்டமிட்டுள்ளார். இதை எதிர்கொள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு அணியினரும் தயாராகி வருகிறார்கள்.