அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் - இபிஎஸ் அழைப்பு.. செம ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்!
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுத்தது போல ஓபிஎஸ்ஸுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
நாடு முழுவதும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது. வருகிற 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் ஆகஸ்ட் 1ம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. தலைமைச் செயலகத்தில் நடக்கும் ஆலோசனையில் அதிமுக சார்பில் யாருக்கு அழைப்பு விடுக்கப்படும்? யார் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு எழுந்தது.
இதையும் படிங்க: எடப்பாடி தரப்புக்கே தேர்தல் ஆணையம் அழைப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்.!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் இபிஎஸ் தரப்பு அனுப்பியிருந்தது. இதற்காக அதிமுக எம்.பி.யும் அமைப்புச் செயலாளருமான சி.வி. சண்முகம் டெல்லிக்கு சென்றிருந்தார். அதே வேளையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடர்வதாக கூறி வரும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கியும், புதிய நிர்வாகிகளை நியமித்தும் வருகிறார். எனவே, தேர்தல் ஆணையம் யாரை அழைக்கிறதோ, அவர்களே அதிமுக என்ற நிலை ஏற்படும் என்பதால், அதிமுகவைப் பொறுத்தவரை முக்கியத்துவம் பெற்றது.
இதையும் படிங்க: உண்மையான அதிமுக எடப்பாடி தான்.. மகிழ்ச்சியில் இருந்த இபிஎஸ் தரப்புக்கு 'ஓபிஎஸ்' கொடுத்த ட்விஸ்ட் !
இந்நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது. இதனையடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுறை ஆகியோர் பங்கேற்பார்கள் என்று இபிஎஸ் அறிவித்திருந்தார். தேர்தல் ஆணையம் இபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுத்திருந்ததால். அவரையே அதிமுக என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்தனர். இதனால், ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்திருந்தது. இதற்கிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓபிஎஸ்ஸுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
இதனையத்து அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார். ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு தரப்புக்குமே தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் பார்வை தெரிய் வந்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், கட்சி பிளவுப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்துவிட்டதாகவும் கருத இடமிருக்கிறது. மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் இருவரையும் ஒரே பார்வையில் பார்ப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
தங்கள் பக்கம் 99 சதவீதம் நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் இருப்பதாக இபிஎஸ் தரப்பு கூறி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் ஓபிஎஸ்ஸுக்கும் அழைப்பு விடுத்திருப்பது இபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
இதையும் படிங்க: ஹிட்லர் அமைச்சர்கள் போலவே இந்தியாவிலும் பொய் சொல்லும் அமைச்சர்கள்.. சென்னையில் பொளந்துகட்டிய சித்தராமையா!