பாஜகவின் பரிபூரண ஆசி யாருக்கு.? ஓபிஎஸ்-இபிஎஸ்ஸை பிரதமர் மோடி சந்திப்பாரா.? எதிர்பார்ப்பில் இரட்டை தலைமை!
சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு தரப்புமே முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், தமிழகத்திலிருந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வெற்றியை பாஜக மேலிடம் எதிர்பார்க்கிறது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. சசிகலா, டிடிவி தினகரன் என அணிகள் ஏற்கனவே பிரிந்து கிடக்கின்றன. இபிஎஸ் - ஓபிஎஸ் ஒன்றாக இருந்தபோதே சசிகலா, டிடிவி தினகரனையும் அரவணைத்து கட்சியைப் பலப்படுத்தும்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே பாஜக யோசனை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. அதுவே நடக்காத நிலையில் தற்போது அதிமுகவில் அடுத்த பிளவும் நடந்துவிட்டது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு எடப்பாடி தான் சரி.. ஆனா எதிர்க்கட்சி பாஜக..! குண்டை தூக்கிப்போட்ட சி.டி ரவி
அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச்சினையால ஓபிஎஸ் - இபிஎஸ் பிரிந்துக் கிடக்கிறார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவுடன் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவியேற்றுள்ளார். என்றாலும் ஒருங்கிணைப்பாளர் பெயரில் ஓபிஎஸ்ஸும், இடைக்கால பொதுச்செயலாளர் பெயரில் இபிஎஸ்ஸும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நியமிப்பதும் நீக்குவதுமாக இருக்கிறார்கள். இதனால், அதிமுகவுக்கு இன்னும் பின்னடைவு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகிறார்கள். இந்தப் பிளவு நீடிக்கும் நிலையில், நாடாளுமன்றத் தேர்தலிலும் அது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதற்கிடையே இனி அதிமுக தான்தான் என்பதை வெளிப்படுத்தி, டெல்லியில் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷாவின் பரிபூரண ஆசியைப் பெற இபிஎஸ் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் இபிஎஸ்ஐ சந்திக்க மறுப்பா? டெல்லியில் நடந்தது என்ன? ஜெயக்குமார் பரபரப்பு தகவல்..!
ஆனால், இபிஎஸ்ஸைச் சந்திக்க மோடியும் அமித்ஷாவும் நேரம் ஒதுக்கித் தரவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், டெல்லி பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு இபிஎஸ் வந்துவிட்டதாக தகவல்கள் அலையடிக்கின்றன. இதேலோல குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்பு மனுத் தாக்கலின் போது மோடியைச் சந்திக்க ஓபிஎஸ் முயன்றார். அப்போதும் சந்திப்பு நடைபெறவில்லை. அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் மோதலால் அடையும் அதிமுக அடையும் பலவீனம் திமுக கூட்டணிக்கு சாதகமாக முடியும் என்ற கோபம் காரணமாகவே பாஜக தலைமை இபிஎஸ்ஸுக்கு சந்திக்க நேரம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தென்னிந்தியாவை தங்கள் இலக்காக வைத்திருக்கும் பாஜக, குறிப்பாக தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என்று கணக்குப் போடுகிறது. ஆனால், அதிமுகவில் நிலவும் பிரச்சினையால் அந்த முயற்சிக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதாலும், ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு தரப்பையும் சம தூரத்தில் பாஜக வைத்திருப்பதாலும் இபிஎஸுடன் சந்திப்பு நடைபெறவில்லை என்றும் தகவல்கள் பாஜகவில் வட்டமடிக்கின்றன.
ஓபிஎஸ் - இபிஎஸ்ஸில் யாரை பாஜக தலைமை ஆதரிக்கிறது என்பது இதுவரை தெரியாத நிலையில், அதிமுக ஒற்றுமையாக இருப்பதையே பாஜக விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே வரும் 28 அன்று சென்னை வரும் பிரதமர் மோடியைச்சந்திக்க ஓபிஎஸ் -இபிஎஸ் என இரு தரப்புமே காய் நகர்த்தி வருகிறது. டெல்லியில் இபிஎஸ் தன்னை சந்திக்க மோடி நேரம் ஒதுக்கித் தரவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரை எப்படியும் சந்திப்பது என்று இபிஎஸ் ஆயத்தமாகி வருகிறார். இதேபோல ஓபிஎஸ்ஸும் தன்னுடைய மனக்குமுறலை பிரதமரிடம் எடுத்து சொல்ல முடிவு செய்திருப்பதாகவும் அவருடைய தரப்பில் சொல்கிறார்கள். பிரதமர் வரும்போது சந்திப்பு நடைபெறுமா அல்லது டெல்லியில் நடந்தது போலவே சந்திப்புகள் நிகழாமல் போகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்- மு.க.ஸ்டாலினுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு வந்தது எப்படி..? சந்தேகம் எழுப்பும் ஆர்.பி.உதயகுமார்