ஓபிஎஸ்- மு.க.ஸ்டாலினுக்கு ஒரே நேரத்தில் கொரோனா பாதிப்பு வந்தது எப்படி..? சந்தேகம் எழுப்பும் ஆர்.பி.உதயகுமார்
தேர்தலில் திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளில் மக்களுக்கு தேவையான ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லையென மதுரையில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசை கண்டித்து மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்பி.உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரியும் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என கோரியும் முழக்கமிட்டனர். இந்த ஆர்பாட்டத்தின் போது பேசிய சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார், தேர்தலில் திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளில் மக்களுக்கு தேவையான ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் எடுத்துக்காட்டாக இருப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அதிமுக ஆட்சியில் உயர்த்தப்படவில்லையென்று தெரிவித்தவர், ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் தங்களது இயல்பான வாழ்க்கை இழந்துள்ள நிலையில் மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு என ஒவ்வொன்றாக உயர்த்தி தமிழக அரசு மக்களை பாதிப்படையவைத்து வருவதாக குறிப்பிட்டார். எடப்பாடி பழனிச்சாமி பொதுசெயலாளராக ஆனவுடன் முதல்வர் ஸ்டாலின் ஒபிஎஸ் இருவருக்கும் ஒரே நேரத்தில் காய்ச்சல் வந்துள்ளதாக தெரிவித்தார். இருவருக்கும் ஒற்றுமையாக எப்படி காய்ச்சல் வருகிறது என தெரியவில்லை என கூறியவர், தமிழகத்தில் இருந்து இருவரையும் தனிமைப்படுத்தி கொள்வதற்கான அச்சாரமாக இருவரும் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர் என ஆர்ப்பாட்டத்தின் போது உதயகுமார் பேசினார்.
இதையும் படியுங்கள்
நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்திற்கு தேர்தல்...! திமுகவை அலறவிடும் அதிமுக மாஜி அமைச்சர்