chennai - salem highway : சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு உச்சநீதிமன்றம், மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியதோடு, இத்திட்டத்தை, 2025க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, இறுதிக்கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்தல், தடத்தில் சில மாற்றம் செய்து, இம்மாதத்தில் முழு வடிவம் பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இருந்து சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த கடந்த அதிமுக அரசு மும்முரம் காட்டியது. ஆனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடின. பல்வேறு கட்டப் போராட்டங்களும் நடத்தப்பட்டன. எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தும் போது விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டப்பட்டது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வர பல்வேறு வழிகள் இருப்பினும் தேனி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் பகுதியில் வசிக்கும் மக்களின் தேர்வாக எப்போதும் இருந்து வருகிறது சேலம்.

சேலத்தில் இருந்து சென்னை வருவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரமானது மிகவும் அதிகமாக இருப்பதால் பயண நேரத்தை குறைக்கும் வகையில் 8 வழிச்சாலை (அ) பசுமை வழிச்சாலை என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது, பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நடத்தினார்கள். இருப்பினும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த ஜனவரி 27ல் மனுவை விசாரித்த நீதிபதிகள் கன்வில்கர், கவாய், கிருஷ்ணமுராரி அடங்கிய அமர்வு, மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து, பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்டியது.
தொடர்ந்து, லோக்சபாவில் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை, 2025க்குள் திட்டம் முழுமை பெறும் என்று அறிவித்தது. இதனால் தமிழக அரசும் வேறு வழியின்றி இத்திட்டத்துக்கு ஓகே சொல்லியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 10 மாதங்களுக்கு மேலாக மவுன நிலையில் இருந்த நெடுஞ்சாலை, வருவாய்த்துறை அதிகாரிகள், தற்போது இத்திட்டத்துக்கு ஆதரவு அளிக்க துவங்கி விட்டனர்.
திட்டப்பணி, நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட நிலையில், எதிர்ப்பால் முடங்கியதால், திட்ட மதிப்பீட்டை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எட்டு வழிச்சாலை பழைய திட்ட மதிப்பீடான, 10 ஆயிரம் கோடி ரூபாய் தற்போது 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் கோடி ரூபாயாக உயர உள்ளது. மேலும், செலவை அதிகரிக்காமல் இருக்க, சுற்று வட்ட சாலை குறைப்பு, விவசாய நில பாதிப்பை தவிர்ப்பது, வனப்பகுதியை ஒட்டிய பகுதி, அரசுக்கு சொந்தமான நிலம் வழியாக திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

அதற்கான சாத்தியக்கூறு குறித்து, கள ஆய்வு பணி நடந்து வருகிறது. அதிமுக அரசு எட்டு வழிச்சாலையை அனுமதித்த போது, எதிர்த்த திமுக உட்பட எல்லா கட்சிகளும், இப்போது எதிர்க்க மறுக்கிறது என்றும், ஆனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறன்றனர்.இதனை திமுக அரசு எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
