30 வருஷ உழைப்பா..? நேத்து வந்த பயலா..? நடுவானில் விஜய்யிடம் கதறிய புஸ்ஸி ஆனந்த்..!
ஆனந்தின் எண்ணம் நிறைவேறினால் ஆதவ் அர்ஜூனாவின் எதிர்காலம் கேள்விக்குறியே. விஜய்க்கு இருவரில் யார் முக்கியம் என்பது வில்லிவாக்கம் தொகுதி ஒதுக்கப்படும்போது தெரிந்துவிடும்.

"என்னைய உங்க கண் முன்னாலேயே ஒழிச்சுக்கட்டப் பார்க்கிறாங்க. நீங்களும் வேடிக்கை பார்க்கிறீர்கள். இந்த இடத்திற்கு வருவதற்கு 30 வருஷமாக உழைச்சிருக்கேன். நேற்று வந்த பயல் பேச்சைக் கேட்டுட்டு, ஒரு முடிவெடுக்கிறீங்க தலைவரே” என அழுகையும், கண்ணீருமாக வானத்தில் பறந்த விமானத்திலேயே விஜய்யுடன் மல்லுக்கட்டி இருக்கிறார் கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த்
"த.வெ.க. மிகப்பெரிய கட்சியாக உள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடித்துவிடும் என்கிற நம்பிக்கை தவெகவினரிடம் உண்டு. அந்த வகையில், இப்பொழுதே இதுதான் எனக்கான தொகுதி. அதாவது த.வெ.க. சார்பில், தான் போட்டியிடும் தொகுதி என துண்டு போட்டு வருகின்றனர் பலர்.
அந்த வகையில், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்று துணை முதல்வர் ஆகிவிடுவது என்கின்ற கனவில் இருந்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். இதற்காக தனியாக ஒரு சர்வேயும் எடுத்தார். அதில், "திமுக தரப்பில் தற்போதைய எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் பலமாக காலூன்றி, மக்கள் திட்டங்களை திறம்பட மக்களுக்கு கொடுத்துள்ளார். அவரையே ஒதுக்கிவிட்டாலும் அவருக்கு அடுத்தபடியாக அதிமுகவில் கே.பி.கந்தன் தொகுதி மக்களிடம் இணக்கமாக இருக்கிறார்.
ஆதலால் உங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று வந்திருக்கிறது அந்த சர்வே. அதற்கு அடுத்தபடியாக அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியை குறிவைத்து அந்தப் பகுதியில் உள்ள தவெக நிர்வாகி பாலமுருகனிடம், "நான் இங்குதான் நிற்கவுள்ளேன் உதவி செய்" என பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான வேலைகளில் ஆயத்தமாக, "ஜே.சி.டி பிரபாகருக்கு இந்தத் தொகுதி. உங்களுக்கு என அம்பத்தூரை காண்பித்துத்தான் அவரை தவெகவிற்கு கொண்டுவந்தோம். நீங்களே இப்படி நடந்துகொண்டால் என்ன செய்வது" என புஸ்ஸி ஆனந்திடம் கேள்வி கேட்க, அந்த திட்டமும் பணால் ஆனது.
'சரி மைலாப்பூரை தொகுதியாவது கொடுங்களேன்' என்றால், அதற்கும் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் மூலம் தடை வருகிறது. ரிஷிவந்தியம் சென்றால் என்ன செய்வீர்கள்?" என மூட்டை முடிச்சுக்களை கட்ட, "இப்பொழுது அங்கு இருப்பது தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திகேயன். அது போக அத்தொகுதியில் எ.வ.வேலுவின் கை ஓங்கியிருக்கிறது. வாய்ப்பு கம்மி" என்றுள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.
இந்த நிலையில், மத்திய உளவுத்துறையான ஐபியின் சர்வேக்கள். அதிமுகவின் பிரம்மாண்யா சர்வேக்கள் மற்றும் காங்கிரஸ் சர்வேக்கள் அனைத்தும் தவெகவின் பலமே சென்னையிலுள்ள சில தொகுதிகளும், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களின் சில தொகுதிகளும் மட்டுமே என அடையாளம் காட்டியது லேட்டாகவே தெரிந்திருக்கிறது. புஸ்ஸி ஆனந்திற்கு அதனுடைய வெளிப்பாடுதான் தஞ்சாவூர் மாநாட்டை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும் விமானத்தில் நடந்த களேபரம்.
தஞ்சாவூர் மாநாடு நிறைவுற்ற நிலையில் தனியார் விமானத்தில் சென்னை திரும்பியிருக்கின்றனர் விஜய், விஷ்ணுரெட்டி, ஜதீஷ் மற்றும் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர். எடுத்த எடுப்பிலேயே, "தலைவரே
ஆதவ் அர்ஜுனா பற்றி பேசவேண்டும். நேரடியாகவே கேட்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்க கண் முன்னாலேயே தொகுதி எனத் தெரிந்தும் என் தலையில் ஒழிச்சுக்கட்ட பார்க்கிறாங்க. ஜெயிக்க முடியாத தொகுதியை கட்டிவிடப் பார்க்கிறாங்க. நான் தோற்றால் என்னை வெளியேற்றுவதுதான் ஆதவின் முதல் திட்டமாக இருக்கும்.
அவர் இப்போது வந்தவர். ரசிகர் மன்றம் உருவானதற்கு முன்பிருந்தே உங்களுடன் 30 ஆண்டுகளாக பயணிக்கின்றேன். என்னையே ஏமாற்ற எப்படி, மனம் வந்தது உங்களுக்கு? நான் போட்டியிட்டு தோற்பதுதான் உங்களுக்கு விருப்பமா? நீங்கள் பெரம்பூரில் நின்று வெற்றிபெற வேண்டுமென பது அனைவரின் விருப்பம். எனக்கு அருகிலிருக்கும் வில்லிவாக்கத்தைக் கொடுக்க முடியவில்லை. ஏன் ஆதவ் அர்ஜுனாவுக்குத்தான் அந்த தொகுதியா? யாருக்கு அந்த தொகுதி என முடிவை கூறுங்கள் என விஜய்யின் அருகிலேயே கண்ணீரும் பிதற்றலுமாக பேசி முடித்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.
ஆனால், இது விஜய்க்கு எதிரான ஒரு வகை மோதலே என்கின்றனர் விபரமறிந்தவர்கள். சென்னையில் உள்ள தொகுதிகள் அனைத்தும் சிறிதானவையே. தலைவர் பெரம்பூரில் நிற்கும்போது அருகிலுள்ள வில்லிவாக்கத்தில் அது எதிரொலிக்காதா? எளிதாக வெற்றிபெறலாம் என்பது ஆதவ் அர்ஜுனாவின் கணிப்பு. அதனை தவிடுபொடியாக்கும் வகையில் பேசியிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். வில்லிவாக்கம் தொகுதியை யாரிடம் கொடுப்பது? இந்த விசயத்தை எப்படி டீல் செய்வது என்கின்ற கவலை விஜய்க்கு. ஆனால் ஆனந்தின் எண்ணம் நிறைவேறினால் ஆதவ் அர்ஜூனாவின் எதிர்காலம் கேள்விக்குறியே!
விஜய்க்கு இருவரில் யார் முக்கியம் என்பது வில்லிவாக்கம் தொகுதி ஒதுக்கப்படும்போது தெரிந்துவிடும்.
