அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1,000.. எப்போ கிடைக்கும் ? அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி செய்தி !!
அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்றதும் மகளிருக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதன்படி, மகளிர் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கலாம் என ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்தப்பட்டது. அதேநேரத்தில், குடும்பத் தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தமிழக பட்ஜெட்டின்போது, நிதியமைச்சர் தியாகராஜன், ‛மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலாண்டில் செயல்படுத்த முடியாத நிலை இருக்கிறது. மகளிருக்கான உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது' எனக் குறிப்பிட்டார். இதனால், இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். பட்ஜெட்டின்போது, மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், ஆறு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும். மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள். உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் திட்டமாக இது கருதப்படுகிறது.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘பெண்களுக்கான உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் கலந்தாய்வா? என்பது குறித்து கல்வியாளர்களுடன் வரும் 17ம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும், நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் பொறியியல் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும்’ என்று கூறினார்.