அண்ணாமலை பாதயாத்திரைக்கு தயாராகியுள்ள சொகுசு பேருந்து..! என்னென்ன வசதிகள் உள்ளது என தெரியுமா.?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாளை முதல் தமிழகம் முழுவதும் தனது நடை பயணத்தை தொடங்க உள்ளார். இதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பேருந்து ராமநாதபுரம் வந்து சேர்ந்தது. இந்த பேருந்தில் தொண்டர்களை சந்திக்கும் வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. பாஜகவை பொறுத்தவரை 3வது முறையாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில் களப்பணியை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய இலக்குகளை நிர்ணயித்து தேர்தல் பணிகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் குறைந்த பட்சம் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே பாஜக போட்டியிடவுள்ள இடங்களில் வாக்குசாவடி முகவர்களை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடை பயணத்தை தொடங்கவுள்ளார்.
அண்ணாமலை நடை பயணம்
ராமேஸ்வரத்தில் நாளை அண்ணாமலை தொடங்கவுள்ள நடை பயணத்தை பாஜக மூத்த தலைவர் அமித்ஷா தொடங்கிவைக்கவுள்ளார். ராமேஸ்வரத்தில் தொடங்கும் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டத்தில் 28,29 ஆம் தேதிகளிலும், 30 ஆம் தேதி பரமக்குடியிலும், 31 ஆம் தேதி திருவாடானை, சிவகங்கை தொகுதியிலும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி திருப்பத்தூரிலும் நடை பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கன்னியாகுமரி சென்றடைகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபயணம் சென்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவுள்ளார். ஜனவரி மாதம் சென்னையை நெருங்கும் அண்ணாமலை, ஜனவரி 5 ஆம் தேதி ஆவடி, மாதவரம், பொன்னேரி, குமுடிப்பூண்டி என ஜனவரி 11 ஆம் தேதி சென்னையில் தனது நடை பயணத்தை முடிக்கவுள்ளார்.
பேருந்தின் சிறப்பு வசதிகள் என்ன.?
இந்த நடை பயணத்தில் புகார் பெட்டியும் வைக்கப்படவுள்ளது. அதில் திமுக அரசின் செய்லபாடுகள் தொடர்பாக புகார்கள், மக்களின் கோரிக்கையையும் புகார் பெட்டியில் மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அண்ணாமலை நாளை தொடங்கவுள்ள நடை பயணத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள சொகுசு பேருந்து ராமநாதபுரத்திற்கு வந்துள்ளது. இந்த பேருந்தில் காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்தில் மேற்கூறையில் நின்று தொண்டர்களை சந்திக்கும் வகையில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
பேருந்தில் மோடி, அண்ணாமலை படங்கள்
மேலும் பேருந்தின் பின் பக்கத்தில் சிறிய ஓய்வு அறையும், அதில் கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. பேருந்தில் பாஜக அரசின் சாதனைகள், திட்டங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலையின் படங்களும் பேருந்தில் இடம்பெற்றுள்ளது. அண்ணாமலை நடைபயணத்தில் கலந்து கொள்ள பாஜகவினர் ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்