பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர் ரவி.? கேள்வி கேட்கும் திருமாவளவன்
நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட ஆளுநர் ரவி நடவடிக்கை எடுப்பாரா என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிதம்பரத்தில் ஆளுநர் ரவி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று(4.10.2023) மாலை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ரவி சிதம்பரம் பல்கலைக்ழகத்திற்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் உள்ள நாயன்மார்களில் ஒருவரான நந்தனாரின் பிறந்த இடத்தில் உள்ள கோவிலுக்கு செல்லவுள்ளார்.
அங்கு ஆதி திராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருவமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நந்தனார் பிறந்த ஊர் ஆதனூரில் 100 பறையர்களுக்கு பூணூல் அணிவிக்காறாராம் ஆளுநர் சனாதனி ஆர்என் ரவி அவர்கள்.
கோவில் பூசாரிகளாக்குவரா.?
இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுப் படுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும். இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? அத்துடன்,
ஆளுநர் அவர்கள் நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம். நாடாண்ட மன்னன் நந்தனை மாடுதின்னும் புலையன் என இழிவுப்படுத்தும் பெரிய புராணக் கட்டுக்கதைகளைப் புறந்தள்ளுவோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்