ஓபிஎஸ்-இபிஎஸ்ஸுக்கு கொம்பு சீவி விட்டாச்சு.. இரட்டை இலையை முடக்குவதே பாஜக லட்சியம்.. பொங்கும் நாஞ்சில் சம்பத்!
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியமே என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஜூலை 11 அன்று நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமையாக அக்கட்சியின் பொதுச்செயலாளராக பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது இபிஎஸ் தரப்பு. இந்தப் பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதம் என்று ஓ, பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அதிமுக பொதுக்குழு மீறியதாக ஓபிஎஸ் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவும் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டம் எங்கு நடைபெறும்? ஆய்வுக்கு பின் முடிவை அறிவித்தது அதிமுக!!
அதிமுகவில் இந்த விவகாரங்கள் பற்றி எரிய, இதன் தாக்கம் உள்ளாட்சி இடைத்தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. தமிழகத்தில் 510 பதவிகளுக்கு ஜூலை 9 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஃபார்ம் ஏ மற்று பி-யில் கட்சியின் தலைவர்கள் ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் கையெழுத்திட வேண்டும். அப்போதுதான் தேர்தல் ஆணையம் அதை ஏற்று, அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை அதிமுக வேட்பாளர்களுக்கு வழங்கும். இந்த ஃபார்மில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவராலும் கையெழுத்திடவில்லை. எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றோடு முடிந்த நிலையில், அதிமுக வேட்பாளர்கள் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அதிமுக வேட்பாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஓபிஎஸ்சும் இல்ல இபிஎஸ்சும் இல்ல.. என் தலைமையில் தான் அதிமுக.. மாபெரும் வெற்றி பெறும்.. சசிகலா
இந்நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பது குறித்து நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்துள்ளார். திமுக சார்பில் நடைபெற்று வரும் திராவிட மாடல் பயிற்சி பாசறையில் பங்கேற்க பெரியபாளையத்துக்கு நாஞ்சில் சம்பத் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியமே. இரட்டை இலை சின்னத்தை முடக்கி அங்கு பாஜக உட்கார பார்க்கிறது. டெல்லியின் எஜமானர்கள் அனுமதியோடு அதிமுகவை எடப்பாடி பழனிசாமி குறைந்த விலைக்கு குத்தகைக்கு எடுத்திருக்கிறார்.
மாநில கட்சிகளை பாஜக வாழ விட்டதாக வரலாறே இல்லை. இதற்கு எடப்பாடி பழனிசாமி பலியாகி இருக்கிறார். பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த பணத்தில்தான் பொதுக்குழு உறுப்பினர்களை எடப்பாடி பழனிச்சாமி விலைக்கு வாங்கி உள்ளார். ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருவரையுமே கொம்பு சீவி விட்டு கட்சியை உடைக்க பாஜக முயற்சிக்கிறது. அழிந்து வரும் அதிமுகவை ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இருவராலும் காப்பாற்ற முடியாது” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் கழுத்தில் காவித் துண்டு.. பாஜகவில் சேருகிறாரா பன்னீர்.. விழுந்து விழுந்து சிரித்த சி.டி ரவி..