ஓபிஎஸ்சும் இல்ல இபிஎஸ்சும் இல்ல.. என் தலைமையில் தான் அதிமுக.. மாபெரும் வெற்றி பெறும்.. சசிகலா
எனது தலைமையையே அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள் என ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்துள்
எனது தலைமையையே அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள் என ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் இயங்கி வந்த அதிமுக மீண்டும் இரண்டாகப் பிரிந்துள்ளது. ஒற்றைத் தலைமையை கட்சிக்கு தேவை என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உறுதியாக கூறி வருகின்றனர். 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்த நிலையில், 23 தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்களையோ, புதிய முடிவுகளையோ எடுக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு வழங்கியதை அடுத்து அக்கூட்டத்தில் ஒற்றை தலைமை அறிவிக்க முடியாமல் போனது.
அதற்கிடையில் பொதுக்குழுவில் கலந்து கொண்டா ஓ. பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவமரியாதை செய்த சம்பவங்கள் அதிமுகவில் பெரும் பிளவை ஏற்படுத்தி உள்ளது. அன்று மாலையே ஓ. பன்னீர்செல்வம் டெல்லி விரைந்தார், அங்கு தனக்கு ஏற்பட்ட அவமானத்தை அவர் பாஜக தேசிய தலைமைகளிடம் பதிவு செய்ததாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் வரும் 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கூறி வருகின்றனர். மொத்தத்தில் என்ன நடக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் தன் தலைமையையே விரும்புவதாகவே சசிகலா கூறியுள்ளார். சிறையில் இருந்து விடுதலையாகி வந்த சசிகலா தொடர்ந்து அரசியல் மற்றும் ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த வரிசையில் நேற்று முன்தினம் மாலை திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் அங்கிருந்து தனது பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார். முன்னதாக திருத்தணிக்கு வந்த அவர் முன்னாள் அரசு கொறடா பிஎம் நரசிம்மன் தலைமையில் பல முன்னாள் நிர்வாகிகள் திரண்டு வந்து அவரை மலர் தூவி வரவேற்றனர். பின்னர் சசிகலா திருத்தணி மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அப்போது வழிநெடுகிலும் ஏராளமானோர் அவருக்கு வரவேற்பளித்தனர். அங்கிருந்த பெண்கள், குழந்தைகளுக்கு சசிகலா சாக்லேட் வழங்கினார். பின்னர் பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் அனைவரும் என் தலைமையையே விரும்புகின்றனர். தற்போது நடந்து வரும் செயல் மிகவும் வருத்தமாக உள்ளது, ஆனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.