Asianet News TamilAsianet News Tamil

பல துறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடி.. முக்கியப் பங்காற்றியது திராவிட இயக்கம்.. முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவுக்குப் பல்வேறு வகைகளில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநிலம். தொழிற்சங்க இயக்கம் என்பது இங்குதான் முதன்முதலாக உருவானது. பிரிட்டிஷார் அதிகப்படியான தொழிற்சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையை மட்டுமல்ல; தொழிலாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது.

Tamil Nadu is the pioneer of India in many fields.. CM Stalin  Speech
Author
First Published Nov 18, 2022, 1:41 PM IST

நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் தொழில் அமைப்புகள் வரத் தொடங்கின. பல துறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடியாக உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்;- வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இந்தக் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழாவில் பங்கெடுப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1920-ஆம் ஆண்டு தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியானது முதன்முதலாக ஆட்சி அமைத்த ஆண்டு 1920-ஆம் ஆண்டு. அப்போதுதான் பல்வேறு தொழில் அமைப்புகள் இங்கு உருவானது. 

இதையும் படிங்க;- எம்ஜிஆர்,ஜெயலலிதா,கருணாநிதி இவர்களை விட.. முதலமைச்சர் ஸ்டாலின்.? அமைச்சர் பேச்சு !

Tamil Nadu is the pioneer of India in many fields.. CM Stalin  Speech

இத்தகைய நீதிக்கட்சியைத் தொடங்கிய வெள்ளுடை வேந்தர் தியாகராயர் அவர்கள்தான், 1909-ஆம் ஆண்டு சென்னையில் வர்த்தகப் பிரமுகர்களை அழைத்துப் பேசி முதன்முதலாகத் தென்னிந்திய வர்த்தகக் கழகத்தை உருவாக்கியவர் என்பதை உங்கள் அனைவருக்கும் நான் நினைவூட்ட விரும்புகிறேன். 12 ஆண்டு காலம் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் மட்டுமல்ல, தொழில் வளர்ச்சிக்காக South Indian Trade Journal என்ற இதழையும் தியாகராயர் அவர்கள் வெளியிட்டு வந்தார். இதனை இங்கே நினைவூட்டக் காரணம் - சமூகநீதி வரலாற்றில் மட்டுமல்ல, சென்னை மாகாணத்தில் தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றியது திராவிட இயக்கம் என்பதால்தான்.

இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக, அனைத்துத் துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாடாகக் கொண்டுள்ளோம் என்றால், அதற்கு அரசியல் - சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும் - தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது. அந்த வகையில் நூற்றாண்டு காணும் இந்த அமைப்பினைப் பாராட்டுவதை என்னுடைய கடமையாக நான் கருதுகிறேன். இந்தியாவுக்குப் பல்வேறு வகைகளில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநிலம். தொழிற்சங்க இயக்கம் என்பது இங்குதான் முதன்முதலாக உருவானது. பிரிட்டிஷார் அதிகப்படியான தொழிற்சாலைகளை இங்கு உருவாக்கினார்கள். அரசியல் உரிமையை மட்டுமல்ல; தொழிலாளர் உரிமையையும் தமிழ்நாடு கேட்டுப் போராடியது.

Tamil Nadu is the pioneer of India in many fields.. CM Stalin  Speech

தூத்துக்குடியில் இருந்த ஹார்வி ஆலையில் தொழிற்சங்கத்தை 1905-ஆம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் உருவாக்கினார். அந்த மாவீரர் சிதம்பரனாருக்கு இன்று, நினைவு நாள். அத்தகைய முக்கியமான நாளில் நீங்கள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதும் மிகமிக மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது.

*  தூத்துக்குடி துறைமுகம்

*  தூத்துக்குடி ஹார்வி ஆலை

*  சென்னை பக்கிங்காம் கர்நாடிக் ஆலை ஆகிய இடங்களில் தொழிலாளர் போராட்டங்கள் நடந்தது.

இதன் காரணமாக, தொழிலாளர் ஒற்றுமை மட்டுமல்ல - தொழிலாளருக்கான சலுகைகள் - சட்டங்கள் ஆகியவை உருவானது. இன்னொரு பக்கத்தில், தொழில் அதிபர்களும் தொழிலாளர்களுக்கு தேவையானவற்றை வழங்கவும், தங்களது தொழில்களை வளர்க்கவும் முயற்சிகள் எடுத்தார்கள். அப்படி உருவானதுதான் தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு. தொழில் முதலீட்டாளர்கள் ஒருங்கிணைந்து, தங்கள் தொழில்கள் சிறந்து விளங்கவும், தொழிலாளர்களுடன் ஒரு சுமுகமான சூழ்நிலையில் கொண்டு செல்லவும் EFSI அமைப்பு உருவாகியது. தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் 15 பெரிய தொழில்துறை சங்கங்கள் கொண்ட 730 நிறுவன உறுப்பினர்களைக் கொண்டு இந்தக் கூட்டமைப்பு முதலில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று சுமார் பத்து லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு, சிறப்பாகச் செயல்பட்டு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவது பாராட்டுக்குரியது. 

இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக, 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற முன்னெடுப்புகளை எடுத்து வருவதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள். தமிழகத்தில் புதிய தொழில்கள் ஏராளமாக இந்த பதினைந்து மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையைத் தாண்டி பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க வருகிறார்கள். அந்த வகையில்தான் தொழிலதிபர்களை - தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

அதே நேரத்தில், தமிழ்நாட்டில் அமைப்புசார்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி இத்துறையில் தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் மூலமாக பல திட்டங்கள் - கல்வி, திருமணம், இறப்பு இழப்பீட்டுத் தொகை, மூக்குக் கண்ணாடி வழங்குதல், ஓய்வு இல்ல வசதி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய ஓய்வு இல்லப் புனரமைப்பிற்காக நமது அரசால் தற்போது ஏழரைக் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில், இந்த வாரியத்தின் உறுப்பினராக இணைந்து, EFSI தங்கள் பங்களிப்பை அளிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்குத் தேவைப்படும் அமைதியான, இணக்கமான சூழ்நிலைக்கு இது இன்றியமையாத ஒன்று!

இந்தக் கூட்டமைப்பு அனைத்து முக்கியத் தொழிற்சங்கங்களுடன் சிறந்த உறவை பேணிப் பாதுகாத்து வருகிறது. மேலும், தொழில்துறை மற்றும் பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள், தொழிலாளர் நலன் குறித்த விவகாரங்களில், தொழிற்சங்கத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தொழில்துறையினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே சமரச முறையின் வாயிலாக சுமுகமான உறவை ஏற்படுத்த தொழிலாளர் துறையானது நடவடிக்கை எடுத்து வருகிறது. உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்சார் வல்லுநர்கள் கொண்ட ஒரு குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;-  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. உயிரிழந்த 13 பேரின் குடும்பத்துக்கு கூடுதலாக 5 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

Tamil Nadu is the pioneer of India in many fields.. CM Stalin  Speech

“தொழில் நடத்துவதில் எளிய நடைமுறை” (Ease of Doing Business) என்பதை செயல்படுத்தி வருகிறோம். இது குறித்த தகவல்களைத் தொழிலாளர் துறையின் வலை தளத்தில் தொழிலாளர்நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையானது தொகுத்து வழங்கி வருகிறது.

தொழிலாளர் நலன் – திறன் மேம்பாட்டுத் துறையின் குறிக்கோள்களுக்கு வேலையளிப்போர் கூட்டமைப்பும் இணைந்து பணியாற்றுவது இன்றியமையாதது.

*  குழந்தைகள் காப்பகம் அமைத்து பராமரிக்க முடியாத தொழிற்சாலைகள் அதிலிருந்து 1 கி.மீ. தூரத்திற்குள் பொது குழந்தைகள் காப்பகம் அமைத்துக் கொள்ள மகப்பேறு நல சட்டத்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு, வேலையளிப்போர் பங்களிப்புடன் தொழிலாளர் நலத் துறையினால் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

* தொழிலாளர்கள் மன அமைதியுடன் பணியாற்றவும், தங்கள் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாணும் பொருட்டும், தொழிலாளர்களின் குறைதீர்க்கும் இணையதள வசதி தொழிலாளர் நலன்–திறன் மேம்பாட்டுத் துறையினால் ஏற்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையானது, வேலையளிப்போர் தாக்கல் செய்யக்கூடிய ஆண்டறிக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த பதிவேடுகள் ஆகியவற்றை எளிய முறையில் சமர்ப்பிக்கும் வகையில், மேற்படி ஒவ்வொரு சட்டங்களின் கீழான நடைமுறையினை எளிமைப்படுத்தியுள்ளது.

* தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்போருக்குத் தொழிலாளர் துறையானது பல நன்மைகளைப் பயக்கும் வகையில் ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது. 

இந்தியாவில் தலைசிறந்த இடத்தைத் தமிழகத் தொழில்துறை பெற வேண்டும். அதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் அரசானது உங்களுக்கு வழங்கும். தொழிலை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் வளர்க்கும் கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு. அரசு, தொழிலதிபர்கள் - தொழிலாளர் ஆகிய முத்தரப்பும் கைகோத்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். இதுவே இந்த அரசினுடைய குறிக்கோள். இவற்றை நோக்கியே நாம் பயணிக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

இதையும் படிங்க;- பிரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்.. எவ்வளவு கொடுத்தாலும் ஈடாகாது.. முதல்வர் ஸ்டாலின்.!

Follow Us:
Download App:
  • android
  • ios