காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவீர்களா..? ராகுல் காந்தி கூறிய பதில் என்ன..?
நான் காங்கிரஸ் தலைவராக இருப்பேனா இல்லையா என்பது கட்சித் தேர்தல்கள் (பதவிக்கு) நடக்கும்போது தெளிவாகத் தெரியும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3 வது நாள் பயணத்தில் ராகுல்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை 7ஆம் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு தனது நடை பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி, 150 நாட்களில் 3500 கி.மீ தூரம் நடந்து செல்லத் திட்டமிட்டுள்ளார். நேற்று அகஸ்தீஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை இடலாக்குடி வழியாக இரவில் கோட்டார் சந்திப்பில் நிறைவடைந்தது. இதனையடுத்து இன்று காலை நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் 3வது நாள் நடை பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி, தக்கலை வரை இன்று பயணம் மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இன்றைய நடை பயணத்தின் போது விவசாய அமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் சந்தித்து பேசினர். இதே போல வழி நெடுகிலும் ஏராளமானோர் ராகுல் சந்தித்து நடை பயணத்திற்கு ஆதரவும் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவரா தேர்ந்தெடுக்கப்படுவீர்களா..?
இதனை தொடர்ந்து தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, தமிழ் அழகான மொழி, நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள விருப்பப்படுகிறேன் ஆனால் கற்றுக்கொள்ள கடினமாக இருக்கும் என நினைப்பதாக தெரிவித்தார். காங்கிரஸ் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்களா.? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, நான் காங்கிரஸ் தலைவராக இருப்பேனா இல்லையா என்பது கட்சித் தேர்தல்கள் (பதவிக்கு) நடக்கும்போது தெளிவாகத் தெரியும் என பதில் அளித்தார். நடைபயணம் குறித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை வரவேற்பதாகவும் கூறினார். மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளை கேட்பதே நடைபயணத்தின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
பாஜக கட்டுப்பாட்டில் அமலாக்க துறை
நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் பாஜக அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வருமானவரி, அமலாக்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுகிறது. பலரும் பாஜக உடன் கைகுலுக்கி சுமூகமாக செல்ல நினைக்கின்றனர். பலவித கருத்தோட்டங்களை கொண்ட இந்தியாவில் ஒற்றை கருத்தை திணிக்க பாஜக முயற்சி செய்கிறது என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இதையும் படியுங்கள்