இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல்கள் செய்த அமைச்சரவை...? இபிஎஸ் அமைச்சரவை தான்..! பெங்களூர் புகழேந்தி ஆவேசம்
கோடநாடு கொலை வழக்குகளில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறைக்குச் செல்வது உறுதி எனக்கூறியவர், எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கட்சி அழிவுக்கு கே.பி.முனுசாமி தான் காரணம்
ஓ.பன்னீர்செல்வத்தில் மனைவியின் முதலாமாண்டு நினைவு அஞ்சலியையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு ஓ.பி.எஸ்-ன் ஆதரவாளரான புகழேந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் அதிமுகவின் மன்னனாக மகுடம் சூட முடியாது, ஐந்தரை அறிவுள்ள எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவரைத் தவறாக வழிநடத்தி செல்வதாகவும், அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் முடங்குகிறது என்றால் அதற்கு காரணம் அரசியல் பச்சோந்தி கே.பி.முனுசாமி தான் காரணம் என விமர்சித்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் ரீதியாக முடிவு கட்டும் வேலையை கே.பி. முனுசாமி சிறப்பாக செய்து வருகிறார் எனவும் குற்றம்சாட்டினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் வி.கே.சசிகலா தவறுதலாக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ததுதான் இப்போதைய அரசியல் மாற்றத்திற்கு காரணம் என கூறியவர்,
இரட்டை இலை முடக்கம்
சசிகலா இதை பலமுறை தன்னிடம் கூறி வருத்தப்பட்டதாகவும், எடப்பாடி பழனிச்சாமி ஜெயிலுக்கு போவது உறுதி எனவும், அவருடன் உள்ள முன்னாள் அமைச்சர்களும் சிறை செல்வார்கள், அதற்குக் காரணம் இந்தியாவில் நடைபெற்ற அனைத்து ஊழல்களையும் விட மிகப்பெரிய ஊழலை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை செய்துள்ளதாக தெரிவித்தார். தேர்தலின் போது அவசர அவசரமாக 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிய பிறகு தென்மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டதால், தென் மாவட்டங்களில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தான் எனவும் தெரிவித்தார். இரட்டை இலையை முடங்கினாலும் கட்சியே போனாலும் பரவாயில்லை சுயேட்சையாக நின்று எடப்பாடி பழனிச்சாமி வரும் தேர்தலை சந்திக்க திட்டம் தீட்டி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இபிஎஸ் ஜெயிலுக்கு போவது உறுதி
அருணா ஜெகதீசன் அறிக்கையின் தகவல்கள் கசிவதைப்போலவே கொடநாடு வழக்கு, ஊழல் வழக்கு உட்பட அனைத்து விஷயங்களும் கசியத் தான் செய்யும் என்றார். அதிமுக ஏற்கனவே மூன்று முறை மீட்கப்பட்டுள்ளது. தற்போது நான்காவது மீட்பராக ஓ.பன்னீர்செல்வம் அவதரித்துள்ளதாக கூறினார். ஊழல் வழக்கு மற்றும் கோடநாடு கொலை வழக்குகளில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிறைக்குச் செல்வது உறுதி எனக்கூறியவர், எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அப்போது ஓ. பன்னீர்செல்வம் சிறப்பாக கட்சியை வழிநடத்துவார். நான் தமிழக அரசை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் கொடநாடு வழக்கு விசாரணையை தாமதப்படுத்தாமல் விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் பெங்களூர் புகழேந்தி வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்