அதிமுகவுக்கு மட்டுமா.? தமிழகத்துக்கும் இபிஎஸ்தான் தலைமையேற்க வேண்டும்.. பொளந்துகட்டும் பொள்ளாச்சி ஜெயராமன்!
அதிமுகவுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் தலைமையேற்க வேண்டும் என்ற தன்னெழுச்சி ஏற்பட்டுள்ளது என்று திருப்பூர் மாநகர அதிமுக செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாட்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமையாக பொறுப்பேற்பதில் இபிஎஸ் உறுதியாக இருக்கும் நிலையில், இரட்டைத் தலைமையை அப்படியே தக்க வைக்க முடியுமா என்ற சகல உத்திகளையும் அரங்கேற்றி வருகிறார் ஓபிஎஸ். ஆனால், ஜூன் 23 அன்று சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஸை திட்டமிட்டு அவமரியாதை செய்து, கூட்டத்திலிருந்து வெளியே போகும் அளவுக்கு இபிஎஸ் தரப்பு சம்பவங்களை நிறைவேற்றிக் காட்டியது. மேலும் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களையும் அதிமுக பொதுக்குழு நிராகரித்துவிட்டது.
அடுத்ததாக, ஜூலை 11 அன்று மீண்டும் புதிய பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டவும் அந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை உள்பட இதர தீர்மானங்களை நிறைவேற்றவும் தீயாய் வேலை செய்து வருகிறது இபிஎஸ் தரப்பு. அந்தப் பொதுக்குழு கூட்டத்தை எப்படியும் நடத்த விடக் கூடாது என்பதில் ஓபிஎஸ் காய்களை நகரத்தத் தொடங்கியிருக்கிறார். இதற்கிடையே ஓபிஎஸ் - இபிஎஸ் என இரு தரப்பினர் அவ்வப்போது எதையாவது பேசி வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு தமிழக அரசியல் களத்தை சூடு குறையாமல் பார்த்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இபிஎஸ் அணியைச் சேர்ந்தவரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தன் பங்குக்கு இன்று பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க: பத்து எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.பி. இருந்தால் போதும்... பாமக ஆட்சிதான்.. பாட்டாளிகளுக்கு ராமதாஸ் போட்ட உத்தரவு!
திருப்பூரில் மாநகர அதிமுக ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், ”அடுத்த மாதம் 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறாது என்று ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்திலிங்கம் தெரிவித்திருக்கிறார். ஆனால், திட்டமிட்டபடி 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடந்தே தீரும். அந்தப் பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படுவார். கட்சி நிர்வாகிகள் எல்லோரும் ஒன்றுகூடி அதிமுகவுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் தலைமை ஏற்க வேண்டும் என்ற தன்னெழுச்சி ஏற்பட்டிருக்கிறது. மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.
இதையும் படிங்க: 80 சதவிகித தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்களோ அவர்கள் பக்கமே அதிமுக ..! கண்ணீர் விட்டு அழுத செல்லூர் ராஜு
அதிமுகவை கட்சிக்கு அப்பாற்பட்டு யாரும் வழி நடத்த முடியாது. கட்சி தொண்டர்கள்தான் தலைமையை முடிவு செய்ய வேண்டும். சென்னையில் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக பொதுக்குழு மூலம் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படுவார். அதிமுக பொதுக்குழு நடக்கலாமா கூடாதா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது. கட்சியில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவை நடத்தலாம். கட்சியின் தொண்டர்கள் முழுக்க எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் ஆதரவாக உள்ளனர். ஓபிஎஸ் தொண்டர்களைச் சந்திக்கும் பயணம் மேற்கொள்வது அவருடைய சொந்த விருப்பம்” என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொண்டர்கள் என்னுடன் தான் உள்ளனர்..! இபிஎஸ் அணிக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்- ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி