80 சதவிகித தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்களோ அவர்கள் பக்கமே அதிமுக ..! கண்ணீர் விட்டு அழுத செல்லூர் ராஜு
அதிமுகவை சாதி,மதத்தின் பெயரைச் சொல்லி பிரிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ளதால், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டு பிரிவாக அதிமுக பிரிந்து உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். 95% மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளனர். இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்ட நிலையில், கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் ஓபிஎஸ் மீது அனுதாபத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மதுரையில் தனியார் அமைப்பு சார்பாக மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற இலட்சியத்துக்காக தொடங்கப்பட்டது அதிமுக. கட்சிக்குள் ஒரு தலைவர் நிர்வாகியை நீக்குவது சாதாரணம். அதுபோலத்தான் கருணாநிதி எம்ஜிஆரை நீக்கினார். நீக்கப்பட்ட எம்ஜிஆருக்கு பொதுமக்கள் அமோக ஆதரவை கொடுத்ததாக தெரிவித்தார். இது திராவிட பூமி. தந்தை பெரியாரின் திராவிட உணர்வு நிறைந்த மண். மாற்று சக்தி வரக்கூடாது என நினைத்த பெரியாரின் சீர்திருத்த கொள்கைகளை கடைப்பிடிப்பது அதிமுக என தெரிவித்தார்.
அதிமுக பக்கம் தொண்டர்கள்
எத்தனையோ சட்ட திட்டங்கள் உள்ள அதிமுகவிற்கு எம்ஜிஆர் உயில் எழுதி வைத்துள்ளார். 80 சதவீதம் யார் ஆதரிக்கிறார்களோ அவருக்கு தான் ஆதரவாக இருக்க வேண்டும் என உள்ளது. {அழுவது போல பதழுதழுத்த குரலில் பேசுகிறார்} அதிமுக இயக்கம் வீழாது. புத்தெழுச்சியோடு மீண்டும் வரும் என தெரிவித்தார். தொண்டர்களை பிரித்து செல்ல முடியாது. அகில இந்திய கட்சிக்கோ மாற்றுக்கட்சிக்கோ தொண்டர்களை அழைத்துச்செல்ல முடியாது என கூறினார். திமுகவில் எளிய தொண்டன் முதலமைச்சராக முடியுமா? அந்தக்கட்சியில் ஜனநாயகம் உள்ளதா என கேள்வி எழுப்பியவர், திமுக ஆட்சியில் ஊடக சுகந்திரம், சினிமா சுதந்திரம் உள்ளதா எனவும் கேட்டார். இந்த சிக்கலான நேரத்தில் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் உணர்ச்சி வசப்படக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
அதிமுக தொண்டர்கள் சாதி,மத இனத்தை சொல்லி பேசுபவர்கக்கு இடம் தராதீர்கள் எனவும் வலியுறுத்தினார்,
சாதி மதத்தை பயன்படுத்தி பிரிக்க முடியாது
சாதி மதம் சாராதவர்கள் அதிமுகவினர் என தெரிவித்தார். பிராமணப்பெண்ணை தலைமையாக கொண்டு செயல்பட்ட இயக்கம் அதிமுக. அவர் தான் 69%இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார் எனவும் கூறினார். எம்ஜிஆரின் ரசிகர்களே கழகத் தொண்டர்கள், இயக்கத்தை ஆழமாக நேசிப்பவர்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். காசுக்கு வேஷம் போடுபவர்கள் எங்கள் பக்கம் இல்லை. அதிமுக ஆயிரங்காலத்து பயிர். தமிழகத்தில் மற்ற கட்சிகள் சுயநலத்தோடு செயல்படுகிறது அதிமுக அப்படி இல்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கி அழகு பார்த்தது அதிமுக. சாதி மதத்தைச் சொல்லி அதிமுகவை அழிக்க பார்க்கிறார்கள் என்றும் இதற்க்கு அதிமுக தொண்டர்கள் பழியாகிவிடக்கூடாது எனவும் செல்லூர் ராஜூ கேட்டுக்கொண்டார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பல்வேறு இடங்களில் செல்லூர் ராஜூ அழுவது போல தழுதழுத்த குரலில் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
இதையும் படியுங்கள்