பத்து எம்.எல்.ஏ.க்கள், ஒரு எம்.பி. இருந்தால் போதும்... பாமக ஆட்சிதான்.. பாட்டாளிகளுக்கு ராமதாஸ் போட்ட உத்தரவு!
புதுச்சேரியில் 8 எம்.எல்.ஏ.க்கள், காரைக்காலில் 2 எம்.எல்.ஏ.க்கள் என 10 எம்எல்ஏக்களையும் எம்.பி. பதவியையும் வெற்றி பெற்றாலே போதும், பாமகவால் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்து விட முடியும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக சார்பில் மாவட்ட அளவிலான பொதுக்குழு கூட்டங்களில் பங்கேற்கும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டில் பாமக ஆட்சியை அமைக்க வேண்டும் என்று தொணர்களை உசுப்பேற்றி வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அக்கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், புதுச்சேரியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதையும் அதற்கு கட்சி தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் பேசியிருக்கிறார். கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், “புதுச்சேரியில் பாமக ஆட்சியைப் பிடிக்க வேண்டு. இதற்கு பாமகவினரை கட்டி இழுக்க வேண்டிய அவசியமில்லை. அணிவகுத்துச் சென்றாலே போதும். புதுச்சேரியில் இளைஞர்கள் அனைவரையும் திரட்டி, அவர்களுக்கு பொறுப்புகளை வழங்க வேண்டும்.
அவர்களை குழுவாக ஒருங்கிணைத்து செயலாற்ற வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் புதுச்சேரியில் 8 எம்.எல்.ஏ.க்கள், காரைக்காலில் 2 எம்.எல்.ஏ.க்கள் என 10 எம்எல்ஏக்களையும் எம்.பி. பதவியையும் வெற்றி பெற்றாலே போதும், பாமகவால் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்து விட முடியும். கடந்த காலங்களில் புதுச்சேரியின் நகரம், கிராமங்களில் தெருதெருவாக, வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்திருக்கிறேன். ஆனாலும், நாம் ஆட்சியைப் பிடிக்கவில்லை. என்னுடைய பிரச்சாரத்தின் பலனை யாரோ அனுபவித்தார்கள். இக்கூட்டத்தின் தீர்மானங்கள் நிறைவேற வேண்டுமென்றால் பாமகவின் ஆட்சி புதுச்சேரியில் வர வேண்டும். அளவிட முடியாத அளவுக்கு இளைஞர்களின் சக்தியை ஒருங்கிணைத்தால்தான் நம்மால் ஆட்சியைப் பிடிக்க முடியும். குறிப்பாக, பெண்கள். அவர்களிடம் பேசினால் அந்த வீட்டின் எல்லா வாக்குகளும் பாமகவுக்குக் கிடைக்கும்.
இதையும் படிங்க: Annamalai : அண்ணாமலைக்கு நன்றி சொன்ன திருமாவளவன்.. எதற்கு தெரியுமா ?
தற்போது கட்சி என்றால் கொள்கை ஏதும் தேவையில்லை. ஒரு கட்சியிலிருந்துகொண்டு சமயம் வரும்போது அடுத்த கட்சிக்கோ அல்லது ஆட்சிக்கு வரும் கட்சிக்கோ மாறி விட வேண்டியதுதான். அதுதான் கட்சிகளின் கொள்கையாக உள்ளது. ஆனால், பாமகவின் கொள்கை உலக நாடுகளுக்கே வழங்கும் கொள்கை ஆகும். இதையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மதுவை விட மிகவும் கொடியது கஞ்சா. அதை ஒழிக்க தீர்மானம் போட்டால் மட்டும் போதாது. கஞ்சாவை ஒழிக்க மாதம் ஒரு போராட்டத்தை பாமக முன்னெடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் போராடத் தயங்கக் கூடாது. புதுச்சேரியில் பாமக ஆட்சி அமைத்து, பாமக முதல்வர் போடும் முதல் கையெழுத்தே மதுவை ஒழிப்பதுதான்.
இதையும் படிங்க: குடும்ப ஆட்சியால் வந்த நிலை.. திமுக இதை செய்யுமா? திமுகவை விளாசிய சசிகலா புஷ்பா!
மக்கள் பாமகவை வேறு மாதிரியாகப் பார்க்கிறார்கள். கொள்கையுடைய கட்சியாகவும் சாதி, மதம், இனம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் பாடுபடும் ஒரே கட்சியாகத்தான் பாமகவைப் பார்க்கிறார்கள். புதுச்சேரி மாநிலம் தனி அந்தஸ்து பெற்ற சிறந்த மாநிலமாக பாமக உருவாக்கும். இதற்கு மக்களின் ஆதரவு தேவை. திரும்ப திரும்ப இரு கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிப்பதால் ஒரு பயனும் இல்லை என்பதை உணர வேண்டும். இதனை உணர்ந்து பாமகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். நாட்டில் பல கட்சிகள் இருந்தாலும் நல்ல கட்சி, நாணயமான, வெகுஜன, கொள்கை, கோட்பாடு உள்ள கட்சி பாமகதான். இதை எண்ணி நாம் செயல்பட வேண்டும்.” என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இதுவும் போச்சா...! நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கிய இபிஎஸ் அணி