மணிப்பூர் போன்ற நிலை தமிழகத்திலும் வரும்; அப்போது நான் இருப்பேனா தெரியாது - திருமாவளவன் பேச்சு

மணிப்பூர் வன்முறை மாநில அரசே முன்நின்று நடத்திய அரசப்பயங்கரவாதம். இதை கண்டுகொள்ளாமல் விட்டால் தமிழகத்திலும் இதேபோல் நிலைமை வரும் என்று மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன் பேச்சு.

mp thirumavalavan and party cadres protest against manipur issue in madurai

மதுரை அண்ணாநகர் அம்பிகா திரையரங்கம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணிப்பூர் வன்முறையில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின்  தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். இதில் 500க்கும் மேற்பட்ட கட்சியினை சேர்ந்தவர்கள் பங்கேற்று மணிப்பூர் முதல்வரை கைது செய்ய  வேண்டும். தார்மீக பொறுப்பேற்று பிரதமர், உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என கண்டன முழக்கம் எழுப்பினர். 

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன்  ஆர்.எஸ்.எஸும், பாஜகவும் நுழைந்த ஊர் நல்லாவே இருக்காது. ஊரையே அழித்து விடுவார்கள், ஒற்றுமையை சிதைத்து விடுவார்கள். அப்படித்தான் தற்பொழுது மணிப்பூரில் செய்து இருக்கிறார்கள். மணிப்பூரில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக மாநிலத்தில் இருந்த இரண்டு பழங்குடியின சமூக மக்களை பிளவுபடுத்தி ஆட்சியை அமைத்திருக்கிறார்கள். 

"மணிப்பூர் மாதிரியே உனக்கும் சேலையை உருவணுமா?" மேடையிலேயே திமுக பெண் சேர்மனுக்கு நடந்த கொடுமை!

அதானி, அம்பானி போன்றவர்கள் மணிப்பூர் சட்டத்தின்படி அந்த பகுதியில் நிலம் வாங்க இயலாது. அந்த சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்பதற்காக இந்த பழங்குடிகளுக்கு இடையே மோதலை அரசாங்கமே முன்னின்று நடத்தி இருக்கிறது. இது அரச பயங்கரவாதம். மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட போதும், நிர்வாணமாக அழைத்து வந்த பொழுதும் நமக்குத் தான் ஐயோ பாவம் அந்த பெண் மனம் எப்படி இருந்ததோ என பெண்ணாகவே மாறி யோசிப்போம். ஆனால் அவர்கள் இதனை வேறு விதமாக சிந்திப்பார்கள். 

குஜராத்தில் இந்து, முஸ்லிம் மோதலை நடத்தி இரு மதங்களை பிரித்து பிரதமர் மோடி குஜராத் முதல்வராக பதவி ஏற்றார். இதனால் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது அத்வானி போன்ற பல முன்னணி தலைவர்கள் பாஜகவில் இருந்த போதும் மோடியை பிரதமராக தேர்ந்தெடுத்து 10 ஆண்டுகளாக பிரதமராக  வைத்து இருக்கிறார்கள். 

80 நாட்களுக்கும் மேலாக மணிப்பூரில் வன்முறை நிகழ்ந்து இருக்கிறது. மாநில அரசு இதனை தடுத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் முன் நின்று நடத்துகிறார்கள். மணிப்பூரில் அமைதி திரும்பினால் அவர்களுக்கு ஆதாயம் இல்லை என்பதால் மத்திய அரசு கலவரத்தை கண்டு கொள்ளவில்லை. மணிப்பூரில் கலவரம் செய்து அதன் வழியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பலன்பெறும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்.

“மணிப்பூரில் இன அழிப்பு படுகொலை“ புதுவையில் எம்.பி. ரவிக்குமார் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். நாங்கள் சிறிய கட்சி தான். மாநில கட்சி தான். ஆனால், கொள்கையில் இமாலயம் போல உறுதியானவர்கள். பெரியவர்கள். அம்பேத்கரின் மாணவனாக, பெரியார் பிள்ளையாக இதை சொல்வது எனது கடமை.

மணிபூரில் நிகழும் கலவரத்தை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் தமிழ்நாட்டிலும் இதே போல நிலைமை வரும் அப்போது திருமாவளவன் இருப்பேனா இல்லையா என்று தெரியவில்லை  என பேசினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios