Asianet News TamilAsianet News Tamil

சிபிஎஸ்இ- யில் இந்துத்துவா திணிப்பு.. திரிக்கப்படும் வரலாறு.. குப்பையில் தூக்கி போடுவார்கள்.. வைகோ காட்டம்..

இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டை நிலைநிறுத்தவும், 'இந்து ராஷ்டிரா' கொள்கைக்கு வலு சேர்க்கவும், வரலாற்று உண்மைகளை மறைத்தும், திரித்தும் பள்ளிப் பாடங்களை மாற்றுவது கடும் கண்டனத்துக்கு உரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 

MDMK Vaiko Statement - CBSE Syllabus Change issue
Author
Tamilnádu, First Published Apr 25, 2022, 1:45 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” உலகம் அறிந்த இந்திய வரலாறை, பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்ற நாள் முதல், மதவெறி நோக்கில் திரித்து எழுதுகின்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள், அதற்காக, பள்ளிப்பாடங்களை நீக்கியும், திருத்தியும், மாற்றங்கள் செய்து வருகின்றார்கள்.

அதன் ஒரு கட்டமாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், சிபிஎஸ்இ 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து பனிப்போர் யுகம், ஆப்பிரிக்க - ஆசியாவில் இஸ்லாமியப் பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதி மன்றங்களின் வரலாறு, தொழிற் புரட்சி ஆகிய பாடங்களை நீக்கி உள்ளது. 

ஃபயஸ் அகமது என்ற உருதுக் கவிஞரின் இரண்டு கவிதைகள், மதம் - வகுப்பு வாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பு அற்ற அரசு என்ற பிரிவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இடம் பெற்று இருந்த பாடங்களையும், ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகிய பாடங்களையும் நீக்கி விட்டனர். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (NCERT) பரிந்துரையின்படி, இந்தப் பாடங்கள் வரும் கல்வி ஆண்டு (2022-23) முதல் நீக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்து இருக்கின்றது.

கடந்த கல்வி ஆண்டில், 11 ஆம் வகுப்பு அரசியல் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கூட்டு ஆட்சி, குடி உரிமை, தேசியவாதம் மற்றும் மதச் சார்பு இன்மை போன்ற பாடங்களை நீக்கினார்கள். இவ்வாறு பள்ளிப் பாடங்களை நீக்கியதன் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் சிந்தனைப் போக்கு இருப்பது அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கின்றது.

இந்துத்துவ சனாதனக் கோட்பாட்டை நிலைநிறுத்தவும், ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே மொழி எனும் 'இந்து ராஷ்டிரா' கொள்கைக்கு வலு சேர்க்கவும், வரலாற்று உண்மைகளை மறைத்தும், திரித்தும் பள்ளிப் பாடங்களை மாற்றுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். ஜெர்மனிய ஹிட்லர் அரசும், இத்தாலியின் முசோலினி அரசும் இப்படித்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு மூளைச் சலவை செய்வதற்கு, பாடத் திட்டங்களில் பாசிச நச்சுக் கருத்துகளைத் திணித்தார்கள். ஆனால் அந்த அரசுகள், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டன என்பதை மறந்து விடக் கூடாது.

அதுபோல, பாஜக அரசின் வரலாற்றுத் திரிபு வேலைகள் வெற்றி பெறாது. எனவே, வரலாற்றுப் பாடங்களை நீக்குவதையும், இருட்டடிப்புச் செய்வதையும், இந்துத்துவக் கருத்துகளைத் திணிப்பதையும் பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios