மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ நாட்டில் இருக்கும் கருப்புபணம் மற்றும் செல்லாத ரூபாய் நோட்டு தடை ஆகிய அறிவிப்புகள் குறித்து பிரதமர் மோடி புத்தாண்டு உரையில் ஏதும் அறிவிக்கவில்லை. ஆனால், நிதிஅமைச்சர் பதவியை கூடுதலாக எடுத்துக்கொண்டு, பொதுபட்ஜெட்டுக்கு முந்தியை உரையை வாசித்து சென்றுள்ளார்.

பிரதமர் மோடி அனைத்தையும் பேசிவிட்டதால், நிதிஅமைச்சர் ஜெட்லி தனது பட்ஜெட்டுக்கு முந்தையை உரையை இழந்துவிட்டார். ‘வெற்றுப்பாத்திரம் தான் அதிகமாக சத்தத்தை எழுப்பும்’ என்பது தெரிந்துவிட்டது.

மோடியின்  பேச்சு, அடிப்படை ஆதாரமற்ற பேச்சு, இதயம் இல்லாதவர்களின் பேச்சாக இருக்கிறது. கடந்த 50 நாட்களில் வங்கியில் பணம் எடுக்க சென்ற மக்களில் 112  பேர் உயிரை பறிகொடுத்துள்ளனர். அவர்களைப் பற்றி பேச மோடி மறந்துவிட்டார். நாட்டுக்கு உரையாற்றுகிறேன் என்ற பெயரில் தனது அரசியல் பழிவாங்களையும், சுயதிட்டங்களையும் அரங்கேற்றி இருக்கிறார். நாட்டுக்கான உரை பட்ஜெட் உரையாக மாறிவிட்டது.

கருப்புபணம் ஒழிப்பு என்ற பெயரில் இன்னும் நாட்டில் நிதி அவசரநிலை தொடர்கிறது. வங்கிகளில் பணம் போதுமான அளவில் இல்லை. இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு இல்லை. 50 நாட்களுக்கு பின் பிரச்சினை தீர்ந்துவிடும் என மக்களுக்கு  உறுதியளித்த வார்த்தையை தவறிவிட்டார் மோடி.

இந்த 50 நாட்களில் கருப்புபணம் எவ்வளவு பிடிபட்டது?, 50 நாட்கள் வேதனையை தாங்கிக் கொண்டு, நாடு எதை அடைந்தது?, 2017ம்ஆண்டு தொடங்கியதை  ரூபாய் நீக்கத்துக்கு முடிவு கட்டுவதாகவும், மோடியை நீக்குவதற்கு தொடக்கமாகவும் அமையட்டும்'' எனத் தெரிவித்தார்.