அண்ணாமலையினால் தான் பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை..!- கே.எஸ்.அழகிரி ஆவேசம்
தமிழக அமைச்சரவை எடுக்கிற முடிவுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா
அண்ணாமலையால் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென காயத்திரி ரகுராம் கூயிருந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதற்கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஆதாரமற்ற கருத்துகளுக்கு விளக்கம் கேட்டால் செய்தியாளர்கள் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவதோடு, மிரட்டுகிற தொனியில் பேசுவது தொடர் கதையாகி வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் திமுக நிர்வாகிகளால் பெண் காவலர்களுக்குத் தொல்லை கொடுத்ததாக புகார் வந்தவுடனே இரு தி.மு.க.வினர் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதைப் பாராட்ட மனமில்லாத அண்ணாமலை, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று புலம்புவதாக கூறியுள்ளார்.
அண்ணாமலைக்கு உரிமையில்லை
உண்மையிலேயே அண்ணாமலையினால் தான் பா.ஜ.க.வில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உரிய விசாரணை நடத்தாமல் தமிழக காவல்துறை மீது பழி போட இவருக்கு எந்த உரிமையும் இல்லையென கூறியுள்ளார். பா.ஜ.க.ஆட்சி செய்கிற மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகிற நிலையில், அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகக் கூறுவது அப்பட்டமான அவதூறாகும். கடந்த 8 ஆண்டுகால மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ள மொத்த கடன் தொகை ரூபாய் 83 லட்சம் கோடி. இந்தியாவையே கடன்கார நாடாக திவாலான நிலைக்கு கொண்டு சென்றது மோடி, அரசு. உண்மை நிலை இப்படியிருக்க, தமிழக அரசின் கடன் தொகையைப் பற்றிப் பேசுவதற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு என்ன அருகதை இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநரை பதவி நீக்க வேண்டும்
தமிழக அமைச்சரவை எடுக்கிற முடிவுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிற தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து, அனைத்து ஜனநாயக மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிப்பதாக கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
உதயநிதி மகனின் புகைப்படத்தை கசியவிட்டது அண்ணாமலை டீம்..! காயத்திரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு