விவசாயிகள் தொடர் தற்கொலையால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
வடகிழக்கு பருவமழையில் 62 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாநில அரசு, தமிழகத்தை உடனடியாக கடுமையான வறட்சி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்க விதிகளில் இடமுள்ளது.
நான் தனிப்பட்ட முறையில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையிலும், ஊடக செய்திகளின் அடிப்படையிலும், 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்து கொண்டதாக அறிகிறேன். நேற்று காலை கூட நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இம்மாவட்டத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 33ஐ தொட்டுள்ளது. விவசாயிகளின் தலையில் இரட்டை இடி இறங்கியுள்ளது.
ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு புறம், விதைக்கும் காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் மறுபுறம். பல விவசாயிகள், கடன் பெற முடியாமலும், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் வாங்க முடியாமலும், கூலிக்கு ஆட்களை நியமிக்க முடியாமலும் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடிப்படை பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியவில்லை. இவை ஒரு புறம் என்றால், கடுமையான வறட்சி, மீதமிருந்து பயிர்களையும் அழித்து விட்டது.
இந்த துயரமான சூழலில் விவசாயிகளின் துயரைப் பகிர்ந்து கொள்ளும் வகையில்... ஜனவரி 5-ம் தேதி எனது பிறந்தநாளினைக் கொண்டாடுவதில்லை என முடிவு செய்துள்ளேன்.
எனவே என்னை வாழ்த்தி சுவரொட்டிகளோ விளம்பரங்களோ வேண்டாம் என்று கழக உடன்பிறப்புகளை கேட்டுக்கொள்கிறேன்.
சில இடங்களில் என்னை வாழ்த்தும் சுவரொட்டிகளைப் பார்க்கிறேன். அவற்றைத் தவிர்க்குமாறு மீண்டும் வேண்டுகிறேன்.
இவ்வாறு கனிமொழி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:56 AM IST