மகளிருக்கு மாதம் ரூ.1,000 எப்போது கிடைக்கும் ? சரமாரி கேள்வி எழுப்பிய மநீம.!
விரைவில் மகளிர் உதவித்தொகை வழங்கப்படுமென உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதியளித்தார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த அறிவிப்புகளில், மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த திட்டமாகும். திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், இத்திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இதனை முன்வைத்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் மேற்கொண்டன.
இதற்கு பதிலளிக்கும் வகையில் விரைவில் மகளிர் உதவித்தொகை வழங்கப்படுமென உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதியளித்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதுகுறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இது எப்போது கிடைக்கும் என்று அவ்வப்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சர்ச்சை.. பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு !
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்கள் நீதி மய்யம் முதலில் முதலில் முன்வைத்த 'மகளிர் உரிமைத் தொகையானது' திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது.கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றார் முதல்வர். ஆட்சிக்கு வந்தபின்னர், அனைவருக்கும் வழங்க முடியாது. உரிமைத்தொகை பெறத்தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குவோம் என்றார் நிதியமைச்சர்.
கடந்த பட்ஜெட்டின்போது, நிதிநிலைமை சரியானதும் வழங்கப்படும் என்று புதுநிலைப்பாடு எடுத்தார் நிதியமைச்சர்.தமிழகத்தின் நிதிநிலைமை குறித்து விவாதிக்க முதல்வர், நிதியமைச்சர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழலில் “மகளிர் உரிமைத்தொகை” திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..இனி இவர்தான் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்..! ஓபிஎஸ் வலையில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி