தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்கினால் மட்டுமே பாஜக உடன் கூட்டணி.? அதிமுக அதிரடி நிபந்தனை
அறிஞர் அண்ணாவை அண்ணாமலை விமர்சித்ததாக கூறி கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்ட நிலையில், பாஜக தேசிய தலைமை அதிமுக தலைமையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதிமுக-பாஜக மோதல்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெற்றி பெற வேண்டிய தொகுதிகளை இலக்காக வைத்து பாஜக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 5 தொகுதிகளை அதிமுக வழங்கியது.
ஆனால் இந்த முறை பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்த்து உள்ளது. ஆனால் அதிமுகவோ கடந்த முறை ஒதுக்கிய தொகுதியிலேயே ஒதுக்க திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மத்தியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு இடையே நேரடியாக மோதல் ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலை கருத்தால் மோதல்
ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விமர்சிக்கும் வகையில் அண்ணாமலை பேட்டியளித்தாக கூறி அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அண்ணாவிற்கு எதிராக மீண்டும் சர்ச்சைக்குள்ளான கருத்தை தெரிவித்ததன் காரணமாக அதிமுகவினர் அண்ணாமலை மீது உச்சகட்ட கோபத்திற்கு உள்ளனர்.
இதனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, சிவி சண்முகம் ஆகியோர் இறுதி எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். இதற்கு அண்ணாமலை பதில் அளிக்கையில், நான் யாருடைய அடிமையும் கிடையாது. கும்பிடு போட்டுக் கொண்டு அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தனிக்கட்சி, தனிக் கொள்கை, சனாதனம் எங்கள் உயிர் மூச்சு. அதற்காக பேச முடியவில்லை என்றால் நான் எதற்காக இந்த இருக்கையில் அமர வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
பாஜகவுடன் கூட்டணி முடிந்தது
இதனை அடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுகவுடன் கூட்டணி முடிந்து விட்டதாகவும், பாஜக மாநில தலைவர் பதவிக்கு அண்ணாமலை லாயக்கு இல்லை என தெரிவித்திருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டு இருந்த நிலையில் அண்ணாமலையின் கருத்துகளால் கூட்டணி உடைந்தது பாஜக தேசிய தலைவர்கள் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனை அடுத்து தேசிய தலைவர்கள் அதிமுக தலைமையை தொடர்பு கொண்டு சமாதான பேச மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைமையை பற்றி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அண்ணாமலையை நீக்க வேண்டும்
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர வேண்டும் என்றால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் எனவும் அதிமுக தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக என்ன செய்வது என்று புரியாமல் பாஜக தேசிய தலைமை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமையில் தேர்தலை எதிர்கொண்டால் மட்டுமே தமிழகத்தில் ஓரளவாவது வெற்றி வாய்ப்பு கிடைக்கும். அதிமுகவை பகைத்து கொண்டால் வெற்றி கேள்விக்குறியாகும் என்பதால் அதிமுக தலைமையை எப்படி சமாதனம் செய்வது என்பது தொடர்பாக பாஜக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்