முதல்ல மாதாமாதம் மின் கணக்கெடுப்பு வாக்குறுதியை நிறைவேற்றுங்க.. மின் கட்டண உயர்வுக்கு சிபிஎம் அதிருப்தி!
மாதாமாதம் மின் கணக்கெடுப்பு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மா நில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.27.50 கட்டணம் வசூலிக்கப்படும். 201- 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.72.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 301 யூனிட் முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.147.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.297.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.155 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதையும் படிங்க: தமிழகத்தில் உயர்கிறது மின் கட்டணம்.. எத்தனை யூனிட்டுக்கு எவ்வளவு கட்டண உயர்வு? இதோ முழு விவரம்.!
இதைத்தவிர இன்னும் தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், வணிக பயன்பாட்டு இடங்கள் போன்றவற்றிலும் மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்டுள்ள மின் கட்டணத்தை அமல்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு சமர்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கட்டண உயர்வு அமலுக்கு வரும். இந்தக் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் திமுக அரசை விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியும் மின் கட்டண உயர்வுக்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சீராக மின்சாரம் கொடுக்க வக்கு இல்ல, இதுல மின்கட்டண உயர்வு வேறு.. திமுக அரசை பழிக்கு பழி தீர்த்த ஜெயக்குமார்.
அதில், “தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1130 வரை மின்கட்டணம் உயரும் என்று மாநில மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவதற்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த மானியத்தை விட்டுத்தர விரும்புபவர்கள் தாமாக முன்வந்து விட்டுத் தரலாம் என்று கூறியிருப்பது தேவையற்றது. இது பொதுமக்கள் மத்தியில் மின்சார கட்டணத்திற்கான மானியம் தொடருமா என்ற அச்சத்தை ஏற்படுத்தும்.
தமிழக அரசு அறிவித்துள்ள உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கும், வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பும் மக்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு நடைபெறும் என்ற வாக்குறுதியும் செயல்படுத்தப்படவில்லை. இப்போதும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறை தொடரும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா..! மின் கட்டண உயர்வுக்கு எதிராக சீறிய அண்ணாமலை
இதனால் உபயோகிக்கும் மின்சார யூனிட் அளவு கூடுதலாகவே வரும். இந்நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும், மாதமாதம் மின் கணக்கெடுப்பு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் வலியுறுத்துகிறோம்.” என்று அறிக்கையில் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.