தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குடும்பத்திலிருந்தே ஏக்நாத் ஷிண்டே.. ஆப்பு வைக்க பாஜக போடும் கணக்கு?
தெலங்கானா ராஷ்டிரிய சமிதியிலிருந்து யார் வேண்டுமென்றாலும் ஏக்நாத் ஷிண்டேவாக வரலாம் என்று அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியை உதறித் தள்ளிவிட்டு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து ஆட்சியமைத்த உத்தவ் தாக்கரேவின் அரசை அதே கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே கவிழ்த்தார். பிறகு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுவிட்டார். இதனையடுத்து தமிழகத்திலும் திமுகவிலிருந்து ஏக்நாத் ஷிண்டேக்கள் வருவார்கள் என்று மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். பிரதமர் மோடியையும் பாஜகவையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ். தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பாஜக பல்வேறு உத்திகளை வகுத்து வருகிறது.
அடுத்த ஆண்டு டிசம்பரில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலங்கானாவில் ஏக்நாத் ஷிண்டே வருவார் என்று அம்மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். கரீம் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “பாஜக தேசிய செயற் குழு கூட்டத்தில் நடந்தது பற்றி முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசுகிறார். அங்கு என்ன நடந்தது என்று அவருக்கு எப்படி தெரியும்? பாஜகவுக்கு எந்த செயல் திட்டமும் இல்லை எனவும் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். பின்னர் பாஜக எப்படி 18 மாநிலங்களில் அதிகாரத்துக்கு வர முடிந்தது? சந்திரசேகர் ராவ் பேசும் விதம் வெட்கக்கேடானது. ஜொகுலம்பா அன்னையையும், இந்துமத உணர்வுகளையும் சந்திரசேகர் ராவ் புண்படுத்தி விட்டார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 8 எம்.பி. தொகுதிகள் உள்பட 144 தொகுதிகள்.. பாஜகவின் மெகா பிளான்.. எல்.முருகனுக்கு புது அசைண்மென்ட்!
இதற்காக சந்திரசேகர ராவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அவருடைய ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அதனால்தான் இதுபோல் பேசுகிறார். பெரு வெள்ளம், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட பண்ணை வீட்டை விட்டு வெளியே வராதவர் சந்திரசேகர ராவ். ஆனால், 18 மணி நேரம் உழைக்கும் பிரதமர் மோடியுடன் உங்களை ஒப்பிடுகிறீர்கள். இதைப் பார்த்து ஒவ்வொருவரும் சிரிக்கிறார்கள். ஏக்நாத் ஷிண்டே பற்றி சந்திரசேகர ராவ் பேசுகிறார். முதலில் உங்கள் கட்சியைப் பாருங்கள். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியில் கூட நிறைய ஷிண்டேக்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறதா பாஜக.? அண்ணாமலையின் 25 தொகுதிகள் டார்கெட்டின் சூட்சுமம் என்ன?
அதனால்தான் ஏக்நாத் ஷிண்டே பற்றி தொடர்ந்து சந்திரசேகர ராவ் பேசி வருகிறார். அவருடைய சொந்தக் கட்சியிலேயே பல ஷிண்டேக்கள் வளர்ந்து வருவதால் அதைக் கண்டு சந்திரசேகர ராவ் பயந்து போயிருக்கிறார். தெலங்கானா ராஷ்டிரிர்ய சமிதியிலிருந்து யார் வேண்டுமென்றாலும் ஏக்நாத் ஷிண்டேவாக வரலாம். அவருடைய மகன் கே.டி.ஆர்., மகள் கவிதா, மருமகன் ஹரீஷ் ராவ் கூட ஏக்நாத் ஷிண்டேவாக இருக்கலாம்." என்று பண்டி சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஏக்நாத் ஷிண்டே அதே பெயரில் இருக்க வேண்டும் என்பதில்லை..! வேறு பெயரிலும் இருக்கலாம் - அண்ணாமலை