தமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறதா பாஜக.? அண்ணாமலையின் 25 தொகுதிகள் டார்கெட்டின் சூட்சுமம் என்ன?
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறி வரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் போல அதிமுக கூட்டணியிலிருந்து அக்கட்சி விலகுமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சசிகலா - டிடிவி தினகரன் - இபிஎஸ் - ஓபிஎஸ் என எத்தனை அணிகள் உருவானாலும் எல்லோரும் ஒரு புள்ளியில் ஒன்றாக இருந்தது பாஜகவுடனான கூட்டணியில்தான். அதற்கு 2017 குடியரசுத் தலைவர் தேர்தலை உதாரணமாகச் சொல்லலாம். இறுதியாக ஒபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்து சுபம் போட்ட பிறகும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகும் அதிமுக - பாஜக கூட்டணி ஏற்பட்டது. 2019இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த பாஜகவுக்கு அதிமுக 5 தொகுதிகளை மட்டுமே வழங்கியது. இந்த 5 தொகுதிகளில் பாஜகவால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை.
இதனையடுத்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக கூட்டணியில் பயணித்த பாஜக, சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியிலேயே இருந்தது. அப்போது 40 தொகுதிகள் வரை பாஜக கேட்பதாக தகவல்கள் வெளியான நிலையில், 20 தொகுதிகளை மட்டுமே அதிமுக வழங்கி ஆச்சரியமூட்டியது. அதில் நான்கு தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக பாஜக அறிவித்தது. இதன்படி போட்டியிட்ட பாஜக, குறிப்பிட்ட சில வெற்றிகளையும் சுமார் 5 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. இதனால், தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக வளர்ந்துவிட்டதாக அக்கட்சித் தலைவர்கள் பேசி வந்தனர்.
இந்நிலையில் அண்மைக் காலமாக கட்சி பொதுக்கூட்டங்களிலும் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தமிழக பாஜக தலைவர் ஒரு விஷயத்தைத் தொடர்ந்து பேசி வருகிறார். அது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து 25 எம்.பி.க்கள் பாஜக சார்பில் செல்வார்கள் என்பதுதான். நேற்றைய செய்தியாளர்கள் கூட்டத்திலும், “தமிழகத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 24 எம்.பி.க்களை பாஜக பெறும். இதை காங்கிரஸ்காரர்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். தமிழகத்திலிருந்து 25 எம்.பி.க்கள் பாஜக வெல்லும் என்றால், அக்கட்சி தேர்தலில் கூட்டணியின்றி தனித்து போட்டியிடுமா என்ற கேள்விதான் எழுகிறது. அதிமுக கூட்டணியிலிருந்து போட்டியிட அவ்வளவு தொகுதிகளை அதிமுக வழங்காது என்பதே அதற்கு முதல் காரணமாக இருக்கக்கூடும்,
தமிழகத்தில் பாஜக கடந்த காலங்களில் 1998-இல் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகள், 1999இல் திமுக கூட்டணியில் 6 தொகுதிகள், 2004ல் அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகள் என்ற அளவில்தான் போட்டியிட்டது. 2014இல் திமுக - அதிமுகஅல்லாத கூட்டணியில் (பாமக, மதிமுக, தேமுதிக) பாஜக இடம் பெற்றபோதும் 7 தொகுதிகளிலும், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டி என் 9 தொகுதிகளில்தான் போட்டியிட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்குத் திரும்பிய பாஜகவுக்கு 5 தொகுதிகள்தான் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2024இல் அண்ணாமலை 25 எம்.பி.க்கள் பாஜகவுக்குக் கிடைப்பார்கள் என்று கூறி வருவதுதான் கேள்வியை எழுப்பி வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளே உள்ள நிலையில் பாஜக தனித்து போட்டியிட்டால்தான் 25 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற கூற்றுக்கு நியாயம் சேர்க்க முடியும். எனவே, அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலகுமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழத்தான் செய்கிறது.
மேலும் அண்ணாமலையின் பேச்சுப்படி பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவைத் தாண்டி பாஜக வெல்ல வேண்டும். திமுகவும் அதிமுகவும் இன்றும்கூட குறைந்தபட்சமாக தலா 20 - 25 சதவீத கட்சி வாக்குகளை வைத்திருக்கும் கட்சிகள். திமுக - அதிமுக கூட்டணியில் இடம் பெறாத கட்சிகள் மொத்தமாக 10 முதல் 18 சதவீதம் வரை கடந்த காலங்களில் வாக்குகள் பெற்றுள்ளன. இந்த சூழலில் பிரதான கட்சிகளைத் தாண்டி பாஜக அதிக வாக்குகளைப் பெற என்ன திட்டம் வைத்திருக்கிறது என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. ஆனால், அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில், பாஜகவின் அடுத்தகட்ட வளர்ச்சி இனி தென்னிந்தியாவில்தான் இருக்கும் என்று அமித் ஷா பேசியதும் குறிப்பிடத்தக்கது. வடக்கில் பாஜக காலூன்றாத மேற்கு வங்காளம், அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் எல்லாம் இன்று பெரிய கட்சியாக பாஜக மாறியுள்ளது. புதுச்சேரியிலும் ஆட்சியை பிடித்திருக்கிறது. எனவே, பாஜகவின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் சுலபத்தில் எதிர்க்கட்சிகளால்கூட கணிக்க முடியாது. ஆக, அண்ணாமலையின் பேச்சு எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது 2024 தேர்தலில் தெரிந்துவிடும்.