திமுகவிடம் எப்பவுமே பெரியண்ணன் தனம் உண்டு. அப்படித்தான் அது நடந்து கொள்ளும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் சரவெடியாக பேசினார்.

தனியார் தொலைக்காட்சியில், நேற்று இரவு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஞானதேசிகன் பேசியபோது இதுகுறித்த கருத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது, ஞானதேசிகன் பேசியதாவது.

திமுகவிடம் பிக் பிரதர் என்ற பெரியண்ணன் தனம் உண்டு. எப்புமே அப்படித்தான் நடந்து கொள்ளும். இதைச் சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

 

கடந்த மாநிலங்களவைத் தேர்தலின்போது தேமுதிக சார்பில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டார். எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தங்களது வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு எங்களிடம் அவர்கள் கேட்டிருந்தனர்.

திமுக சார்பில் கனிமொழி நிறுத்தப்பட்டார். அவருக்கு ஆதரவு அளிக்குமாறு பலரிடமும் திமுக ஆதரவு கேட்டது. எங்களிடம் கேட்கவில்லை. இதையடுத்து நமது ஆதரவை தேமுதிக மட்டுமே கேட்டிருந்ததால், அதை ஆதரிக்குமாறு சோனியா காந்தி கூறினார். அப்போது நான் டெல்லியில் இருந்தேன்.

அப்போது, திடீரென சென்னையில் இருந்து சில திமுக ஆதரவு சக்திகள் (காங்கிரஸ் கட்சியினர்) டெல்லிக்கு வந்தனர். கனிமொழிக்கான ஆதரவு கொடுப்பது குறித்து, அதற்கான வேலைகளை செய்தனர். இதனால், கடைசி நேரத்தில் அது மாற்றப்பட்டது என்றார்.