ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படும் முதல்வர்.. அவருடன் அரை மணிநேரம் ஸ்டாலின் ரகசிய பேச்சு.. போட்டு தாக்கும் இபிஎஸ்.!
அதிமுகவை முடக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஓபிஎஸ்க்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம்.
சட்டப்பேரவையில் அதிமுகவை எதிர்கொள்ள தெம்பு, திராணி இல்லாத திமுக, சபாநாயகர் மூலம் எங்களை வெளியேற்றுகிறது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நிகழ்வை கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் இன்று நடைபெற்றது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அப்படி இருந்த போதிலும் தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தடையை மீறி போராட்டம் ஈடுபட்டதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க;- சசிகலா - டிடிவி தினகரன் ‘திடீர்’ சந்திப்பு.. ஜெயலிதாவின் மரணம் இப்படித்தான்! சீக்ரெட் சொன்ன டிடிவி
கைது செய்த அனைவரையும் அரசு பேருந்துகளில் ஏற்றி ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எததிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி;- சட்டப்பேரவையில் அதிமுகவை எதிர்கொள்ள தெம்பு, திராணி இல்லாத திமுக, சபாநாயகர் மூலம் எங்களை வெளியேற்றுகிறது. சட்டமன்றம் வேறு கட்சி வேறு என்பதை சபாநாயகர் புரிந்து கொள்ள வேண்டும். சபாநாயகர் சட்டமன்ற மரபுகளையும், மாண்புகளையும் மீறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்தவர்தான் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக செயல்பட முடியும். பலமுறை கடிதம் கொடுத்தும் சபாநாயகர் வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். சட்டப்பேரவையில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஓபிஎஸ் மூலம் அதிமுகவை முடக்க நினைக்கிறார். எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை அங்கீகரிக்கவில்லை என சபாநாயகர் கூறியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று சட்டமன்றம் முடிந்த பிறகு ஸ்டாலினும் ஓபிஎஸ்ஸூம் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அதிமுகவை முடக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஓபிஎஸ்க்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் செயல்படுவது வெளிப்படையாக தெரிகிறது. எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட்.. எடப்பாடி சொன்னது பொய்.! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் திருப்பம்