ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலுமாக தடை செய்வது கேள்விக்குறிதான்.? கார்த்திக் சிதம்பரம் கருத்தால் பரபரப்பு
ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலுமாக தடை செய்வது ஒரு கேள்விக்குறிதான்? என தெரிவித்துள்ள கார்த்திக் சிதம்பரம் பண பரிமாற்றத்தில் கட்டுப்பாடு விதிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை நான்கு மாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழக அரசு சட்ட மசோதா நிறைவேற்ற அதிகாரம் இல்லையென்றும் ஆளுநர் தெரிவித்திருப்பது தமிழக அரசியல் கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் இயற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலுமாக தடை செய்வது ஒரு கேள்விக்குறிதான் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள்
காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், வடநாட்டு தொழிலாளர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்திய குடிமக்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் குடியேறலாம், நிரந்தரமாக குடியிருக்கும் மாநிலத்தில் வாக்குகள் செலுத்தும் உரிமையும் அவர்களுக்கு உண்டு என தெரிவித்தார். மேலும் வெளிமாநில தொழிலாளர்கள் வராவிட்டால் தமிழகத்தில் பல தொழில்கள் நலிந்து விடும், வடநாட்டு தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வரவில்லை என்றால் பரோட்டா கிடைக்காது எனவும் கூறினார்.
ஆன்லைன் மசோதா - கேள்வி குறிதான்
ஆன்லைன் சூதாட்ட மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆன்லைன் சூதாட்டத்தை முற்றிலுமாக தடை செய்வது ஒரு கேள்விக்குறிதான்? பண பரிமாற்றத்தில் வேண்டும் என்றால் கட்டுப்பாடு விதிக்கலாம் என கூறினார். இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை அதிமுக உயிரோட்டமாக இருக்கும். பாஜக நிழலில் இல்லாமல் செயல்பட்டால் அதிமுகவிற்கு எதிர்காலம் உண்டு என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்