இன்னும் எத்தனை உயிர்கள் அந்த பலிபீடத்துக்குத் தேவை.! யாருக்கு சார்பானவர் இந்த ஆளுநர்- முரசொலி கடும் விமர்சனம்
ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யக் கூடாது. அது மிக நல்ல விளையாட்டு. அறிவுக்கூர்மைக்கு எடுத்துக்காட்டு. மகாபாரத காலத்தில் இருந்து தொடர்வது. அதனை தடை செய்யக் கூடாது. நல்ல ஒரு மாநில அரசு அதனை ஊக்கப்படுத்த வேண்டும்' என்று மிகத் தைரியசாலியான ஆளுநர் சொல்லலாமே?திமுக நாளேடான முரசொலி தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.
இப்ப தான் இதையே கண்டுபிடித்தீங்களா.?
ஆன் லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ரவி இரண்டாவது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆளுநருக்கு எதிராக போராட்டமும் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இந்தநிலையில் திமுக நாளேடான முரசொலி தனது தலையங்கத்தில் ஆளுநர் ரவியை விமர்சித்துள்ளது. அந்த தலைவயங்கத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பி - 4 மாதங்கள் ஆனபிறகு, 'இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதற்கு சட்டமன்றத்துக்கு அதிகாரமில்லை' என்று கண்டுபிடித்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.இரவி. பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்கவே அவருக்கு நான்கு மாதம் தேவைப்பட்டு இருக்கிறது. 'இவர்தான் துரிதமாக முடிவெடுக்க வேண்டும் என்று தினந்தோறும் வகுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
கடமையை செய்ய கூடாதா.?
தமிழ்நாடு சட்டமன்றம் சட்டம் இயற்றுவதற்கும் - ஆளுநர் அதனை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியதற்கும் இடையில் 44 பேர் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் எத்தனை உயிர்கள் அந்த பலிபீடத்துக்குத் தேவை என்று தெரியவில்லை.ஆசை காட்டி மோசடி நடக்கும் - விளையாட்டு என்ற பெயரால் ஏமாற்றுதல் நடக்கும் - இதனால் பலரது பணமும் பறிக்கப்படும் - தற்கொலைகள் நடக்கும் - குடும்பங்கள் அழியும் - அதனை ஒரு மாநில அரசு பார்த்துக் கொண்டு கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டுமா? சட்டம் ஒழுங்கைக் காப்பதும், மக்களைக் காப்பதும், மோசடியாளர்களை முடக்குவதும், ஏமாற்றுக்காரர்களைத் தடுப்பதும் மாநில அரசின் கடமை அல்லவா? அந்தக் கடமையைச் செய்யக் கூடாது என்று ஒரு மாநிலத் தின் ஆளுநரே சொல்கிறார். இதனை விட ‘சட்டவிரோதம்' இருக்க முடியுமா? யாருக்குச் சார்பானவர் இந்த ஆளுநர்?
ஆளுநரை சந்தித்த சூதாட்ட நிறுவனம்.?
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆளுநரை வந்து சந்தித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதனை இன்னமும் ஆளுநர் மாளிகை மறுத்ததாகத் தகவல் இல்லை. இப்போது இந்தச் சட்டம் திருப்பி அனுப்பப்படுவதற்குப் பின்னணி யார் என்பதை அடையாளம் காண்பது ஊடகங்களுக்குச் சிரமம் அல்ல. ஆன்லைன் ரம்மியை மொத்தமாகத் தடை செய்ய தி.மு.க. அரசு திட்டமிட்டு அதற்கான அவசரச் சட்டத்தைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய நிலையில் - ஆன்லைன் ரம்மியை விதிமுறைப்படி எப்படி நடத்தலாம் என்று அதற்கான விதிகளை வகுக்கத் தொடங்கி இருக்கிறது பா.ஜ.க. அரசு. இதனால்தான் இழுத்தடிக்கிறார் ஆளுநர். 'ஆன்லைன் விளையாட்டு என்பது 200 மில்லியன் அமெரிக்க டாலர் தொழிலாகும். இதனை புத்தாக்க நிறுவனங்கள் எனப்படும் ஸ்டார்ட் அப் தொழிலாகவே பா.ஜ.க. அரசு பார்க்கிறது” என்று ஒன்றிய தகவல் தொழில் நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த ஜனவரி மாதம் சொல்லி இருக்கிறார். இதுதான் ஆளுநரின் இந்த நிலைப்பாட்டுக்குக் காரணம்.
ஆளுநரின் உண்மை முகம் இதுதான்.?
‘ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யக் கூடாது. அது மிக நல்ல விளையாட்டு. அறிவுக்கூர்மைக்கு எடுத்துக்காட்டு. மகாபாரத காலத்தில் இருந்து தொடர்வது. அதனை தடை செய்யக் கூடாது. நல்ல ஒரு மாநில அரசு அதனை ஊக்கப்படுத்த வேண்டும்' என்று மிகத் தைரியசாலியான ஆளுநர் சொல்லலாமே? அதை விட்டுவிட்டு, 'மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை' என்று எதற்காகப் பதுங்க வேண்டும்? ஆளுநரின் உண்மை முகம் இதுதான். ஆரியம், திராவிடம், சனாதனம் என்று அவர் பேசுவது எல்லாம் திசை திருப்பும் தந்திரங்களே! என முரசொலி தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்