இந்தியாவை பற்றி வாய் கிழிய பேசும் ஆளுநர்.! ஆன்லைன் ரம்மி விளையாட்டு அதிபருக்கு துணைபோவது ஏன்? காங்கிரஸ் கேள்வி
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பா.ஜ.க.வின் நோக்கத்தை முற்றிலுமாக நிறைவேற்றுகிறார் ஆளுநர் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
போலியான வீடியோ வெளியிட்ட பாஜக
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செயல்பாடுகளையும், தமிழகத்தின் வளர்ச்சியினையும் பொறுத்துக் கொள்ளமுடியாத ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அதனுடைய சிந்தாந்தங்களில் ஊறித் திளைத்துள்ள பா.ஜ.க.வும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் ஜனநாயக விரோதமாக என்னென்ன செயல்கள் செய்யமுடியுமோ அதையே நோக்கமாக கொண்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வடமாநில தொழிலாளர்கள் தாக்குப்படுவதைப் போன்ற போலியான, அவதூறான காணெளியை இந்திய அளவில் பா.ஜ.க.வின் முக்கிய பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பதிவிட்டு தமிழ்நாட்டில் கலவரம் ஏற்படுத்திடவும், ஆட்சிக்கு களங்கம் கற்பித்திடவும் முனைந்தார்கள். அது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.
செய்திதாள் பார்ப்பதற்கே அச்சம்
இங்குள்ள பா.ஜ.க.வினரும் தொடர்ச்சியாக அதைப் பற்றியே பேசி பிரச்சனையை தூண்டும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் சட்டமன்றப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி, 4 மாதம் 11 நாட்கள் கடந்த பின்பு புதியதாக விளக்கம் கேட்டு ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆளுநரின் இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. இதன்மூலம் ஆளுநர் இம்மசோதா நிறைவேற்றுவதில் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார். தமிழ்நாட்டு மக்களின் முக்கிய வாழ்வாதாரா பிரச்சினையாக உள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மற்றும் பா.ஜ.க.வின் நோக்கத்தை முற்றிலுமாக நிறைவேற்றுகிறார் ஆளுநர். உயிர்குடிக்கும் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏதேனும் உயிர் போயிருக்குமோ என்று ஒவ்வொரு நாளும் செய்திதாள் பார்ப்பதற்கே அச்சமாக இருக்கிறது.
ஆன்லைன் சூதாட்ட அதிபருக்கு துணைபோகும் ஆளுநர்
தமிழ்நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது மனிதத் தன்மையற்ற செயல். மிகுந்த கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு மேடையிலும் இந்தியாவை பற்றியும், சனாதானத்தைப் பற்றியும் வாய் கிழிய பேசும் ஆளுநர் அவர்களுக்கு உயிர்குடிக்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கு தடையாக இருப்பது எது? ஆன்லைன் ரம்மி விளையாட்டு அதிபருக்கு ஆளுநர் துணைபோவது ஏன்? ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் கிளர்ந்தெழும் காலம் வெகுதூரத்தில் இல்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்