சீனா நமது மிகப்பெரிய வெளிப்புற அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் இன்னும் பெரிய அச்சுறுத்தல் இங்கேயே உள்ளது. சங்க பரிவார் பரப்பும் வெறுப்பு, பிளவுதான் பெரிய அச்சுறுத்தல்.
சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி செங்கோட்டையில் இருந்து மூவர்ணக் கொடியை ஏற்றினார். நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் தனது உரையில், ஆர்.எஸ்.எஸ் சங்கத்தையும் குறிப்பிட்டு பாராட்டினார். சுதந்திரதின உரையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பிரதமர் பாராட்டிப்பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கடத தொடங்கி உள்ளன. ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் பிரதமர் மோடியின் இந்தப்பேச்சுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அசாதுதீன் ஓவைசி சமூக வலைதளத்தில் இதுகுறித்து, “சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸை புகழ்வது சுதந்திரப் போராட்டத்திற்கு அவமானம். ஆர்.எஸ்.எஸ் அதன் சித்தாந்த கூட்டாளிகள் ஆங்கிலேயர்களின் காலாட்படை வீரர்களாக செயல்பட்டனர். அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஒருபோதும் பங்கேற்கவில்லை. அவர்கள் பிரிட்டிஷாரை எதிர்க்காத அளவுக்கு காந்தியை வெறுத்தனர்.
உண்மையான வரலாற்றைப் படிப்பதும், நாட்டின் உண்மையான ஹீரோக்களை மதிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை பிரதமர் மீண்டும் நமக்கு நினைவூட்டி உள்ளார். நாம் இதைச் செய்யாவிட்டால், கோழைத்தனத்தை துணிச்சலாக நமக்கு விற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்த அனைவரையும் உள்ளடக்கிய தேசியவாதத்தின் மதிப்புகளை ஆர்.எஸ்.எஸ் நிராகரிக்கிறது.
இந்துத்துவத்தின் சித்தாந்தம் விலக்குரிமையை நம்புகிறது. நமது அரசியலமைப்பின் மதிப்புகளுக்கு முரணானது. மோடி நாக்பூருக்குச் சென்று ஆர்.எஸ்.எஸை ஒரு தன்னார்வலராகப் பாராட்டி இருக்கலாம். பிரதமராக செங்கோட்டையில் இருந்து அவர் ஏன் இப்படி செய்ய வேண்டி வந்தது? சீனா நமது மிகப்பெரிய வெளிப்புற அச்சுறுத்தலாக உள்ளது. ஆனால் இன்னும் பெரிய அச்சுறுத்தல் இங்கேயே உள்ளது. சங்க பரிவார் பரப்பும் வெறுப்பு, பிளவுதான் பெரிய அச்சுறுத்தல். நமது சுதந்திரத்தை உண்மையிலேயே பாதுகாக்க, இதுபோன்ற அனைத்து சக்திகளையும் நாம் தோற்கடிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, ‘‘பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஆர்எஸ்எஸ்-ஐப் புகழ்ந்தது மிகவும் வருந்தத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் ஒரு கேள்விக்குரிய வரலாற்று சாதனையைக் கொண்ட ஒரு அமைப்பு. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது.

காலனித்துவ ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கான பயணம் நீண்டது, கடினமானது.பிரதமர் ஆர்எஸ்எஸ்-ஐப் புகழ்ந்து நமது தியாகிகளின் நினைவை அவமதித்துள்ளார்’’ என்று அவர் குற்றம் சாட்டினார்.
சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸை பாராட்டினார். ‘‘ஆர்எஸ்எஸ்-ன் வரலாறு புகழ்பெற்றது. அது உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம். அதன் அனைத்து தன்னார்வலர்களும் தேசத்திற்குச் செய்த சேவை பாராட்டுக்குரியது. 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமைப்பு பிறந்தது. ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம். தனிநபர் வளர்ச்சியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியுடன் சங்கம் 100 ஆண்டுகள் பணியாற்றியது’’ எனப் பாராட்டி பேசியிருந்தார்.
