சென்னையில், சீமானை வலியச்சென்று சந்தித்து கைகுலுக்கிய பாஜக தலைவர் அண்ணாமலை, Fight பண்ணுங்கண்ணா, Strong ஆ இருங்கண்ணா என்று கூறி வாழ்த்தினார். பாஜக- நாதக தலைவர்களின் திடீர் நெருக்கம் அரசியலில் பல யூகங்களை கிளப்பிவிட்டிருக்கிறது.
Annamalai meets Seeman: சமீபகாலமாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகளில் புதுப்புது மாற்றங்கள் தென்படுகின்றன. ஒருகாலத்தில் பெரியார் கொள்கைகளை மேடைகளில் முழங்கி வந்த சீமான், கொஞ்சம் கொஞ்சமாக பெரியாரை கைவிட்டு, தமிழ்- தமிழர் என பேசத் தொடங்கினார்.
ஆனால், சீமானின் போக்கில் அதிரடி மாற்றமாக, கடந்த சில மாதங்களாக தந்தை பெரியாரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பை அவர் சந்தித்து வருகிறார். இந்த விவகாரத்தில் சீமானுக்கு ஆதரவளித்த ஒரே கட்சி, பாஜக மட்டும் தான். இதையடுத்து, சீமானை சங்கி என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பரவலாக பலரும் விமர்சனம் செய்தனர். பாஜக ஆதரவுடன் சீமான் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த பரபரப்புகளுக்கு நிலையில், சென்னையில் நேற்று சீமானை சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. பாஜக நிர்வாகி காயத்ரி தேவியின் மகள் திருமண விழாவிற்கு சென்ற அண்ணாமலை, அங்கே காரில் சீமான் அமர்ந்திருப்பதை கேள்விப்பட்டார்.
பெரியாரை ஏற்றுக்கொள்ளும் தம்பிகள் கட்சியை விட்டு போங்க.! சீமானின் அதிரடி அறிவிப்பு
உடனே, கார் இருந்த பகுதியை நோக்கிச் சென்ற அண்ணாமலை, காருக்குள் அமர்ந்திருந்த சீமான பார்த்து வணக்கம் சொன்னார். பின்னர், "நலமா அண்ணா? Fight பண்ணிக்கிட்டே இருங்க அண்ணா... Strongஆ இருங்க அண்ணா" என்று ஆறுதலாகக் கூறிவிட்டு உடனே அங்கிருந்து நகர்தார். சீமானும் புன்முறுவலுடன் அண்ணாமலைக்கு பதிலளித்துவிட்டு விடை கொடுத்தார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது. பெரியார் மீதான விமர்சனம், நடிகை பாலியல் வழக்கு உள்ளிட்ட பிரச்சினைகளில் தனித்துவிடப்பட்டுள்ளார் சீமான். இதில் இருந்து மீள வேண்டும்; இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தலை சந்திக்க முடியும் என்று நினைக்கும் சீமான், ஒரே நேரத்தில் எல்லோரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தன்னை அவமானப்படுத்திய திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. அதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்டவற்றுடன் கொஞ்சம் இணக்கமாக செல்லவும் சீமான் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதன்விளைவே பாஜக மீதான விமர்சனங்களில் மென்மையான போக்கை சீமான் கடைபிடிப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, சீமான் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: தேவை கருதி விரும்பினால் உலகின் எந்த மொழியையும் கற்கலாம். உன் மொழி தேசிய மொழி என்றால் என் மொழி என்ன? பல தேசிய மொழிகளின் கூடாரம் இந்தியா. நானும் அவரும் இந்தியர்தான். ஆளுபவர்களுக்கு தான் குழப்பம் உள்ளது.
நாகரீகமற்றவர்கள் என்று மத்திய அமைச்சர் கருத்து சொன்னதும், அதை அப்படியே தமிழர்கள் மேல் திமுகவினர் திருப்புகிறார்கள். நாகரிகமானவர்கள் என்று சொல்லி இருந்தால், அதை திமுக தங்களுக்கானது என்று எடுத்துக் கொள்ளும். எனினும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அந்த வார்த்தையை சொல்லி இருக்க வேண்டாம். நாடாளுமன்றம் பட்டிமன்றம் போல் நடக்கிறது" என்று தெரிவித்தார்.
