எடப்பாடியின் தாத்தா ஆரம்பித்த கட்சியல்ல அதிமுக - ஓ.பி.எஸ். அதிரடி
அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமியின் தாத்தாவோ, பன்னீர்செல்வத்தின் தாத்தாவோ தொடங்கிய கட்சி கிடையாது. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட கட்சி. அதனை காப்பாற்ற தான் போராடுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு நேற்றைய தினம் வெளியானது. தீர்ப்பில் பொதுக்குழு செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது அணி நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மீண்டும் நீதிமன்றத்தை நாட உள்ளோம். பொதுக்குழுவை தான் உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமியை இடைக்காள பொதுச்செயலாளர் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பை வைத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தை நாட முடியாது. பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை. மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் நடைமுறைக்கு வரவில்லை. காகிதத்தில் மட்டுமே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தனிக்கட்சி தொடங்க உள்ளீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, நாங்கள் ஏன் தனி கட்சி தொடங்க வேண்டும்? மக்கள் மன்றத்தை நாட உள்ளோம். தர்ம யுத்தத்திற்கு நல்ல முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். நிச்சயம் நல்ல் தீர்ப்பு கிடைக்கும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் எங்களுக்கு எந்தவித பின்னடைவும் கிடையாது. தொண்டர்கள் அனைவரும் எழுச்சியுடன் உள்ளனர்.
அதிமுகவை சொந்தம் கொண்டாட இது எடப்பாடி பழனிசாமியின் தாத்தாவோ, பன்னீர்செல்வத்தின் தாத்தாவோ தொடங்கிய கட்சி கிடையாது. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு. ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட கட்சி. 30 ஆண்டு காலம் பொதுச்செயலாளராக இருந்து இயக்கத்தை கட்டுக்கோப்பாக வழிநடத்திய ஜெயலலிதா தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற விதியை யாரும் மாற்ற முடியாது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள்.. தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை..!
எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் எந்த கட்சிக்கும் எந்த டீமும் கிடையாது. சசிகலா உள்ளிட்டோரை விரைவில் சந்திக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.