வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்ல சோம்பல் பட்டுக் கொண்டு, பெரும்பாலானவர்கள் கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை தான் வாங்கி பருகுகிறார்கள். இன்னும் சில அந்த பாட்டில்களை பல மாதங்கள் பயன்படுத்தி வருவதுண்டு. பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதால் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.  

சமீப காலமாக பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் இப்போது நம் வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. நம் சமையலறையில் பலவிதமான பிளாஸ்டிக் பாத்திரங்களை பார்க்க முடியும். உணவுப் பொருட்களை சேமிக்க பிளாஸ்டிக் டப்பாக்களை பயன்படுத்துகிறோம். அது மட்டுமல்லாமல், பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிக்கிறோம். வெளியில் சென்றாலும் பிளாஸ்டிக் பாட்டில்களில் தான் தண்ணீர் வாங்கி குடிக்கிறோம். ஆனால், பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா? 

பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுச் சூழலுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே பிளாஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்தும் போது நம்முடைய உடலில் என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பது நல்லதா?

பிளாஸ்டிக் பாட்டில்களில் (plastic bottles) உள்ள தண்ணீரில் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளன. தண்ணீரை நீண்ட நேரம் சேமித்து வைப்பதால், ஃவுளூரைடு, ஆர்சனிக், அலுமினியம் போன்ற நச்சு கூறுகள் உடலில் சேர வாய்ப்புள்ளது. எனவே, பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் குடிப்பது மெதுவாக விஷம் குடிப்பதற்கு சமம். இது கொஞ்சம் கொஞ்சமாக நம் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும்.

மேலும் படிக்க: வேலூர் ஸ்பெஷல் மீன் சேமியா...இப்படி ஒரு ருசியான உணவை எங்குமே சாப்பிடிருக்க மாட்டீங்க

சில நேரங்களில் பிளாஸ்டிக் உருகி தண்ணீரில் கலக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக, காரில் போகும்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை அங்கேயே விட்டு விடுகிறோம். பாட்டிலில் சூரிய ஒளி நேரடியாக படும்போது, பிளாஸ்டிக்கில் உள்ள பொருட்கள் தண்ணீரில் கலந்துவிடும். இது பெண்களுக்கு மார்பக புற்றுநோயை உண்டாக்கும் டையாக்ஸின் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

என்னென்ன நோய்கள் வரும் ?

பிளாஸ்டிக் பாட்டில்களில் தொடர்ந்து தண்ணீர் குடித்தால், நீரிழிவு நோய்(diabetics) வரலாம். ஏனெனில், அதில் பிஸ்பீனால் ஏ (Bisphenol A) என்ற பொருள் உள்ளது. இது நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இனப்பெருக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்போதெல்லாம், நிறைய கம்பெனிகள் பிளாஸ்டிக் பாட்டில்களில் கிடைக்கும் தண்ணீரை வைட்டமின்கள் நிறைந்தது என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், அந்த தண்ணீரைக் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், அதில் உணவு வண்ணம் மற்றும் அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் (High Fructose Corn Syrup) உள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள தண்ணீரை திரும்பத் திரும்ப குடிப்பதால் நம் ஆரோக்கியம் கெடும். எனவே, முடிந்த வரை பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை தவிர்த்து, செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லது. 

மேலும் படிக்க: ஆரோக்கியமான காலை உணவிற்கு சூப்பரான சர்க்கரைவல்லி கிழங்கு அடை

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். முடிந்த வரை பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள். பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில் அல்லது செம்பு பாட்டிலை பயன்படுத்துவது சிறந்தது. சுற்றுப்புறத்தை பாதுகாப்பதோடு, ஆரோக்கியத்தையும் காக்கலாம்.