ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி சிஎஸ்கே. தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, 2010, 2011, 2018 ஆகிய மூன்று சீசன்களிலும் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஆடிய அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்ற ஒரே அணி சிஎஸ்கே. அதற்கு காரணம், தோனி தலைமையிலான் சிஎஸ்கே அணியில், ரெய்னா, ஜடேஜா, பிராவோ என கோர் டீம் வலுவாக இருப்பதுதான். 

மற்ற எந்த அணிகளுக்கும் இல்லாத பெருமையாக, சிஎஸ்கே அணி ஒரு குடும்பம் போலவே இருந்தது. அதனால் தான் அந்த அணியில் தேவையில்லாமல் எந்தமாற்றமும் செய்யப்படாது. எந்த வீரரும் அவ்வளவு எளிதாக தூக்கிவீசப்படமாட்டார்கள். தோனி, ரெய்னா ஆகிய வீரர்கள் சென்னையின் செல்லப்பிள்ளைகளாகவே மாறிப்போனார்கள். 

தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்ததையடுத்து, 33 வயதே ஆன ரெய்னாவும், அவருடனேயே தனது சர்வதேச கெரியரை முடித்துக்கொண்டார். அந்தளவிற்கு இருவரும் நெருக்கமானவர்கள். இப்படி நெருக்கமாக இருந்தவர்கள் இப்போது பிரிந்து போயிருக்கிறார்கள். 

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்றுள்ளன. சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு முன்பாகவே, சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சி முகாம் நடத்திய நிலையில், துபாயில் சிஎஸ்கே வீரர்கள் இருவர் உட்பட அணியை சேர்ந்த 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

இதற்கிடையே, ரெய்னா திடீரென கடந்த 29ம் தேதி துபாயிலிருந்து இந்தியாவிற்கு திரும்பினார். பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் அவரது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் அவரது மாமா உயிரிழந்துவிட்டதாகவும், அதற்காகத்தான் ரெய்னா இந்தியா திரும்பிவிட்டதாகவும், ஐபிஎல் 13வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டதாக தகவல் வெளிவந்தது. 

ஆனால் அணி நிர்வாகத்துடனான அதிருப்தியால் தான் அவர் விலகியிருக்கிறார். துபாயில், தோனிக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பால்கனி இருந்துள்ளது. தோனிக்கு மட்டும் பால்கனியுடன் கூடிய, நல்ல வியூ உள்ள அறையை ஒதுக்கிவிட்டு, தனக்கு சாதாரண அறையை ஒதுக்கியது குறித்து அறை ஒதுக்குவதன் பொறுப்பாளரிடம் கேட்டுள்ளார் ரெய்னா. ஒரேயொரு அறை மட்டுமே பால்கனியுடன் இருந்ததாகவும் அதனால் தான் உங்களுக்கு பால்கனி அறை ஒதுக்கமுடியாமல் போனதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் தோனியை மட்டும் ஸ்பெஷலாகவும் தன்னை இரண்டாம் தரமாகவும் நடத்துவதாக உணர்ந்துள்ளார் ரெய்னா. இந்த சம்பவம் துபாய் சென்று, அனைத்து வீரர்களுக்கும் அறை ஒதுக்கப்பட்டபோதே நடந்துள்ளது. ரெய்னாவின் அறை குறித்த அதிருப்தி தகவல், தோனிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ரெய்னாவை தொடர்புகொண்டு தோனி பேசியபோதும், அவரிடமும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் ரெய்னா. ஆனால் தோனி சமாதானப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தால் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த ரெய்னாவுக்கு, சிஎஸ்கே வீரர்கள் தீபக் சாஹர் மற்றும் ருதுராத் கெய்க்வாட் உட்பட அணியை சேர்ந்த மொத்தம் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ரெய்னாவுக்கு பயம் வந்துள்ளது. இதையடுத்து சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் அலட்சியம் குறித்து சி.இ.ஓ காசி விஸ்வநாதனிடம் பேசியுள்ளார் ரெய்னா. சென்னையில் பயிற்சி முகாம் நடத்தியது, வீரர்கள் சிலர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் வீரர்களின் அறைக்கு சென்றது ஆகியவை குறித்து அதிருப்தியையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய ரெய்னா, தனது குடும்பத்தினரை நினைத்து பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மறுபடியும் இந்த தகவல் தோனிக்கு தெரிவிக்கப்பட, தோனி எவ்வளவோ எடுத்துக்கூறியும் கேட்காத ரெய்னா, இந்தியாவுக்கு திரும்புவதில் உறுதியாக இருந்துள்ளார். இதற்கிடையே தோனியுடனும் அணி நிர்வாகத்தினருடனும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபத்தில் சில வார்த்தைகளையும் உதிர்த்துள்ளார் ரெய்னா. இதனால் அணி நிர்வாகத்துக்கும் ரெய்னாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. ரெய்னா இந்தியாவுக்கு திரும்புவதில் உறுதியாக இருந்ததையடுத்து, தோனியும், அவரது போக்கிலேயே விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டாராம். இதையடுத்துத்தான் ரெய்னா, ஐபிஎல்லில் இருந்து விலகி இந்தியா திரும்பியுள்ளார்.

அதன் விளைவாகத்தான், ரெய்னா மீதான அதிருப்தியை, அவுட்லுக்கிற்கு அளித்த பேட்டியில், சிஎஸ்கே உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன் வெளிப்படுத்தியிருந்தார்.

Read More: மண்டைக்கனம் பிடித்த ரெய்னா.. சிஎஸ்கே உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன் கடும் விளாசல்..!