ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்றுள்ளன. சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கு முன்பாகவே, சென்னையில் ஐந்து நாட்கள் பயிற்சி முகாம் நடத்திய நிலையில், துபாயில் சிஎஸ்கே வீரர்கள் இருவர் உட்பட அணியை சேர்ந்த 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

இதற்கிடையே, ரெய்னா திடீரென கடந்த 29ம் தேதி துபாயிலிருந்து இந்தியாவிற்கு திரும்பினார். பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் அவரது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் அவரது மாமா உயிரிழந்துவிட்டதாகவும், அதற்காகத்தான் ரெய்னா இந்தியா திரும்பிவிட்டதாகவும், ஐபிஎல் 13வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டதாக தகவல் வெளிவந்தது. 

ஆனால் அணி நிர்வாகத்துடனான அதிருப்தியால் தான் அவர் விலகியிருக்கிறார். சென்னையில் பயிற்சி முகாம் நடத்தியது, தோனிக்கு ஒதுக்கப்பட்டதை போன்ற பால்கனியுடன் கூடிய அறை ஒதுக்கப்படவில்லை ஆகிய காரணங்களுக்காக அதிருப்தியில் இருந்த ரெய்னா, அணி நிர்வாகத்துடன் வாக்குவாதம் செய்துவிட்டு, தொடரிலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. 

இதை உறுதிப்படுத்தும் வகையில், அந்த அணியின் உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசனின் கருத்தும் உள்ளது. அவுட்லுக்கிற்கு அவர் அளித்த பேட்டியில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதும் ஒரு குடும்பம் போல உள்ளது. அனைத்து மூத்த வீரர்களும் எப்படி ஒன்றிணைந்து இருக்க வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள். உங்களுக்கு தயக்கம் இருந்தால், மகிழ்ச்சியாக இல்லை என்றால் கிளம்பலாம். நான் யாரையும் எதையும் செய்யுமாறு வற்புறுத்த மாட்டேன். சில சமயம் வெற்றி உங்கள் தலைக்கு ஏறி விடும். 

சில கிரிக்கெட் வீரர்கள் பழைய நடிகர்களைப் போல நடந்து கொள்கிறார்கள். ஐபிஎல்லில் நிச்சயம் ரெய்னா இழக்கப்போகும் பணம் குறித்து விரைவில் புரிந்து கொள்வார்.என்று கடுமையாக விளாசினார் ஸ்ரீநிவாசன்.